தஞ்சாவூர் மாவட்டத்தில் திருநல்லூர் என்ற புராணப் பெயர் கொண்ட நல்லூர் என்ற ஊரில் தினமும் ஐந்து முறை நிறம் மாறும் சிவபெருமான் கோவில் அமைந்துள்ளது. குந்திதேவி தனது தோஷம் நீங்க வழிபட்ட தலம் என்ற சிறப்பை இந்த கோவில் பெற்றுள்ளது.
கோவில் வரலாறு
தன்னை மணம் புரிவதற்காக இமயமலையில் தவம் செய்து வந்த பார்வதி தேவியை சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்தின் போது உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் இமயமலையில் திரண்ட தன் காரணமாக வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது.
இதையடுத்து அகத்தியரை பொதிகை மலை பகுதிக்கு செல்லுமாறு பணிந்தார் சிவபெருமான். ஆனால் திருமணத்தை காணமுடியாமல் போகுமே என்று மனம் வருந்திய அகத்தியரை, 'தென்பகுதியில் உனக்கு எனது திருமண காட்சியை காட்டி அருள்வேன்' என்று கூறி தேற்றினார் சிவபெருமான்.
அதன்படி சிவபெருமான், அகத்தியருக்கு திருக்கல்யாண காட்சி கொடுத்த இடம் தான் திருநல்லூர். திருமண காட்சியை கண்டு மகிழ்ந்த அகத்தியர், இத்தலத்தில் உள்ள சுந்தரலிங்கத்தின் வலது புறம் மற்றொரு லிங்கத்தை வைத்து பூஜித்து வழிபட்டார்.
அகத்தியர் தரிசித்த ஈசனின் திருமணக் கோல காட்சியை மூலவர் லிங்கத்தின் பின்புறம் காணலாம். ரேஸ்வரர் தினமும் ஐந்து முறை நிறம் மாறுகிறார். தாமிர நிறம், இளம் சிவப்பு, தங்க நிறம், நவ இங்குள்ள கல்யாண சுந்த ரத்தின பச்சை, இன்ன நிறமென்று கூறமுடியாத வண்ணம் என ஐந்து வண்ணத்தில் காட்சி தருவதால், இவர் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில்தான் திருநாவுக்கரசருக்கு பாத தரிசனம் வழங்கியுள்ளார் சிவபெருமான். அதன் காரணமாக இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பெருமாள் கோவிலைப் போன்று சடாரி ஆசி வழங்கப்படுகிறது.
8 கரங்களுடன் நடராஜர்
அம்மன் திரிபுர சுந்தரி தனி சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 8 கரங்களுடன் ஆடும் நடராஜர், 8 கரங்களை கொண்ட காளி, அப்பர், சம்பந்தர், சுந்தரர், காசி விஸ்வநாதர், அகத்தியர் ஆகியோரும் இங்கு அருள்பாலித்து வருகின்றனர். மேற்கு கோபுர வாசலின் மேற்புறம், பலிபீட வடிவில் கணநாதர் வீற்றிருக்கிறார்.
காசியை தவிர்த்து, இந்த ஆலயத்தில் மட்டுமே கணநாதர் பலிபீட வடிவில் தரிசிக்கப்படுகிறார். ஆண்டுக்கு ஒரு முறை இரவில் நடக்கும் கணநாதர் பூஜை சிறப்பானதாகும். அன்றைய தினம் திருநல்லூர் மட்டுமின்றி, பக்கத்து ஊரிலும் உள்ள மக்கள், தங்கள் பசு ஒரு வேளை கறக்கும் பாலை அப்படியே கொடுத்து இந்த பூஜையில் கலந்து கொள்வார்கள். இந்த பூஜையை பக்தர்கள் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
சோமாஸ்கந்தர்
இந்த கோவிலில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தி, திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு இணையாக அமைந்துள்ளது. மாசி மகத்தின் போது இவர் கோவிலுக்குள் உலா வருவார். மாடக் கோவிலின் படிகள் வழியாக சோமாஸ்கந்த மூர்த்தி இறங்கும்போது, அடியார்கள் வெண்சாமரமும், விசிறியும் வீசுவார்கள்.
ஆனாலும் கூட பெருமானின் முகத்தில் வியர்வை துளிகள் அரும்புவதைக் காணலாம். தல விருட்சமாக வில்வமரம் உள்ளது. இதனை ஆதிமரம் என்கின்றனர். ஏனெனில் இந்த வில்வ மரம் தான் முதல் முதலாக தோன்றிய வில்வமரம் என்று கூறப்படுகிறது. ஆகையால் இம்மரத்தின் வில்வ இலைகளால் இறைவனை அர்ச்சனை செய்ய நமக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
சப்தசாகரம் தீர்த்த மகிமை
இந்த தலத்தில் உள்ள சப்தசாகரம் என்ற தீர்த்தம், மாசி மகம் அன்று கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடுவதன் பலனை கொடுக்கும் என்பது இத்தலத்திற்கு உரிய பெருமையாகும். பாண்டவர்களின் தாய் குந்தி தேவி, பஞ்சபூதங்களினால் குழந்தை பெற்ற காரணத்தால் அவளுக்கு தோஷம் ஏற்பட்டது.
அந்த தோஷம் நீங்க நாரதரிடம் யோசனை கேட்டார் குந்திதேவி. 'ஏழு கடல்களில் நீராடினால், அந்த தோஷம் நீங்கும்' என்று வழி கூறினார் நாரத முனிவர். 'பெண்ணான என்னால் எப்படி ஏழு கடல்களில் சென்று நீராட முடியும். வேறு ஏதாவது வழி கூறி அருள வேண்டும்' என்று மன முருக வேண்டினாள் குந்திதேவி.
தற்கு நாரதர், 'அப்படியானால் கும்பகோணம் அருகில் உள்ள திருநல்லூர் சென்று கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபடுங்கள். அதற்குள் நான் ஒரு வழியை கண்டுபிடிக்கிறேன்' என்று கூறினார். நாரதரின் சொல்படி, குந்திதேவி உடனடியாக திருநல்லூர் சென்று கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபட்டு வந்தார்.
அதற்குள் நாரதர், ஏழு கடல்களின் நீரையும் இத்தலத்தில் உள்ள குளத்தில் சேர்ப்பித்தார். ஏழு கடல்களின் நீரை இந்த குளத்தில் சேர்த்ததால், 'சப்தசாகரம்' என்று இந்த தீர்த்தம் பெயர்பெற்றது. பின்னர் மகம் நட்சத்திரத்தில் பிறந்த குந்திதேவி, தன் தோஷம் நீங்க நல்லூர் குளத்தில் நீராடினார்.
மகம் நட்சத்திரத்திற்கு உரிய கோவில் நல்லூர் ஆகும். இந்த குளத்தில் நீராடினால் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.