Monday, January 21, 2013
காஞ்சீபுரம் வரதராஜர் ஆலயம்
ஸ்தல வரலாறு
காஞ்சீபுரத்தில் உள்ள புகழ் பெற்ற வரதராஜர் ஆலயம் 2000 ஆண்டுகள் முந்தைய பழமையான தலம்.பல்லவ மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணிகள் நடைபெற்ற தலம். இங்குள்ளபெருமாளை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும் சக்கரத்தாழ்வார் எனப் பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதியில் இருக்கும் பெருமானை வணங்கினால் திருமணத்தடை நீங்குகிறது.வழக்குகளில் வெற்றி கிடைக்கிறது.
வாழ்வில் வளமும் நிம்மதியும் கிடைக்கிறது என அனுபவித்தவர்கள் கூறுகிறார்கள். தனி சன்னதியில் வீற்றிருக்கும் பெருந்தேவித் தாயாரை வணங்கினால் பெண்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் தீர்கின்றன.
குழந்தை வரம் வேண்டுவோரும் தாயாரை வணங்குகின்றனர் இவ்விடத்தில் தங்கபல்லி வெள்ளி பல்லிகளாக இருக்கும் சூரியன் சந்திரரை தரிசனம் செய்தால் நம்மீது பல்லி விழுவதால் உண்டாகும் தோசங்களும் கிரகண தோசங்களும் விலகி ஷேமம் உண்டாகும்.
நம் மனதில் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். புத்திரதோஷம் உள்ள வர்கள் அமாவாசையுடன், திங்கள்கிழமை சேர்ந்த நாளில் மரத்தையும், சன்னதியையும் சுற்றிவந்து வழிபடுகிறார்கள். பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தல், தாயாருக்கு புடவை சாத்துதல், மற்றும் சர்க்கரைப் பொங்கல் பெருமாளுக்கு படைத்தல் ஆகியவை இங்கு நேர்த்திகடன்களாக இருக்கின்றன.
அனந்தசரஸ் தீர்த்தக்கரையில் சக்கரத் தாழ்வார் சன்னதி இருக்கிறது. இங்குள்ள உற்சவர் சக்கரத்தாழ்வார் மிகவும் விசேஷமானவர். இவரைச் சுற்றியுள்ள அலங்கார வளைவில் 12 சக்கரத்தாழ்வார் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. வல்லபாச்சாரியார் என்ற பக்தர் இங்கு சுவாமிக்கு, மூங்கில் குழாய் கொண்டு தயாரித்த இட்லியை படைத்து வழிபட்டார்.
இதுவே, "காஞ்சிபுரம் இட்லி' எனப் பெயர் பெற்றது. அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், சுக்கு, உப்பு மற்றும் நெய் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த இட்லியை காலை 6 மணி பூஜையின்போது நைவேத்யம் செய்கின்றனர். பங்குனியில் பல்லவ உற்சவம் 7 நாள் நடக்கும். இந்நாளில் சுவாமியை நூறு கால் மண்டபத்தில் எழச்செய்து, குங்குமப்பூ தீர்த்தம், சந்தனம் சேர்ந்த கலவையைப் பூசி, ஈரத்துணியை அணிவிப்பர்.
பின்பு, சுவாமியை மாந்தளிர் மீது சயனிக்கச் செய்து, 7 திரைகளைக் கட்டி பூஜை செய்வர். சுவாமிக்கு கோடை வெப்பத்தின் தாக்கம் இல்லாதிருக்க, அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக இவ்வாறு செய்கிறார்கள்.
* உற்சவருக்கு, "அழைத்து வாழ வைத்த பெருமாள்' என்ற வித்தியாசமான பெயர் இருக்கிறது.
* கீதையில் கிருஷ்ண பகவான், தனது வடிவமாகக் குறிப்பிட்ட அரச மரமே இத்தலத்தின் விருட்சம். மரத்தின் எதிரே கரியமாணிக்க வரதர் சன்னதி உள்ளது. புத்திரதோஷம் உள்ளவர்கள் அமாவாசையுடன், திங்கள்கிழமை சேர்ந்த நாளில் மரத்தையும், சன்னதியையும் சுற்றிவந்து வழிபடுகிறார்கள்.
* வைகாசி பிரம்மோற்ஸவம், ஆனி சுவாதி மற்றும் ஆடி கஜேந்திர மோட்ச நாட்களில் சுவாமி கருடசேவை காண்கிறார்.
* ராமானுஜருக்காக கண்களை இழந்த கூரத்தாழ்வார், பார்வை பெற்ற தலம் என்பதால், கண் நோய் நீங்க இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.
* காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களைக் குறிக்கும் விதமாக மூலஸ்தான படிகள், மதிலில் பதிக்கப்பட்ட கற்கள், தீர்த்தக்கரை படிகள் ஆகியவை 24 என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன.
பிரம்மா தன்மனம் பரிசுத்தமாவதற்கு காஞ்சியில் யாகம் செய்தார். அவ்வமயம் அவருடைய பத்தினியாகிய சரஸ்வதியை விடுத்து மற்ற இரு மனைவியராகிய சாவித்திரி, காயத்திரி ஆகியோருடன் இருந்து யாகம் செய்யத் தொடங்கினர்.அதனை அறிந்த சரஸ்வதி மிகவும் கோபம் கொண்டு வேகவதி என்ற ஆறாய் வந்து யாகத்தை அழிக்க முயற்சி செய்தாள்.
பிரம்மாவின் வேண்டுகோளின் படி மகாவிஷ்ணு யதோத்தகாரியாக வந்து பிறந்த மேனியாக குறுக்கே சயனித்துக் கொண்டார்.பிரம்மாவின் யாகம் பூர்த்தியான உடனே யாக குண்டத்திலிருந்து புண்ணியகோடி விமானத்துடன் பெருமாள் தோன்றினார். பின்பு, பிரம்மா அத்திமரத்தில் ஒரு சிலை வடித்து இங்கே பிரதிஷ்டை செய்தார்.
வேண்டும் வரம் தருபவர் என்பதால் இவர், "வரதராஜர்' எனப் பெயர் பெற்றார். வரதராஜ பெருமாளின் தேவிக்கு பெருந்தேவி என்றுபெயர். 24 நான்கு படிகள் ஏறி அத்திகிரியை அடைய வேண்டும்.மிகப்பெரும் அத்திமரத்தால் ஆன பழைய அத்திவரதராஜ பெருமாள் சயன நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பெருமானின் திருமேனியை வெளியே கொண்டு வந்து தரிசனத்திற்காக வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.*
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment