Menu

Thirupathi Seva Online Live

Wednesday, January 2, 2013

திருவையாற்றில் அப்பர் கயிலைக்காட்சி


திருவையாற்றில் கயிலைக்காட்சி கண்டால் கயிலாயம் தரிசித்த புண்ணியம் பெறலாம்.

தெய்வமணம் கமழும் திருநாடாக விளங்குவது சோழநாடு. "சோழநாடுசோறுடைத்து' என்பார்கள். வெறும் வயிற்றுக்கு மட்டும் சோறன்று; உயிருக்கு சோறாகிய திருவருள் இன்பமும் தரும் என்றும் பொருள்கொள்ளலாம். சோழநாட்டில் அன்னை காவிரியால் எழில்பெறும் கரைகள் வெறும் மண்ணகமல்ல, விண்ணகம். அதனால்தான் திருநாவுக்கரசர் சோழநாட்டையே சுற்றிச்சுற்றி வலம் வந்தார். இறுதியில் அவருக்குக் கயிலையின் மீதுநாட்டம் ஏற்பட்டது. எனவே கயிலை நோக்கிச் சென்றார். ஆனால் இறைவனோ அவரை கயிலைக்கு அழைக்காமல் தன்குடியிருப்பை தற்காலிகமாக ஐயாற்றுக்குமாற்றினார். ஆம், திருவையாறு, அப்பருக்கு திருக்கயிலாயம் ஆனது. நம்பினோருக்கு உய்வுதரும் திருத்தலமானது. இந்நிகழ்வு நடந்தேறியது ஒரு ஆடி அமாவாசை நன்னாளில்தான். திருநாவுக்கரசர் யாத்திரையாகப் பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்றார். அப்போது தென்கயிலாயமாகிய திருக்காளத்திக்கு வந்தார். திருக்காளத்தியப்பரை வணங்கி மகிழ்ந்தார். அதன்பின் வடகயிலாயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் திருக்கோலத்தை தரிசிக்க விரும்பினார். திருக்காளத்தியிலிருந்து புறப்பட்டு ஸ்ரீசைலம், மாளவம், இலாடம் (வங்காளம்), மத்திமபைதிசம் (மத்தியபிரதேசம்) முதலிய பகுதிகளைக் கடந்து கங்கைக்கரையில் உள்ள வாரணாசியை அடைந்தார். அதன்பின் மனிதர்களால் எளிதில் போக முடியாத வழிகளில் கயிலைமலையை நோக்கி நடந்துசென்றார் திருநாவுக்கரசர். வழியில் கிடைத்த இலை, சருகு, கிழங்கு, பழங்கள் மட்டுமே உண்டு, சிலசமயம் அதனையும் தவிர்த்து இரவு பகலாக திருக்கயிலாயத்தை நோக்கித் தனது பயணத்தை மேற்கொண்டார் திருநாவுக்கரசர். ஒருநிலையில் அவரின்பாத தசைகள் தோய்ந்துபோயின. மணிக்கட்டுகள் மறத்துப்போயின. அப்போதும் இறைவன் மீது கொண்டபக்தியால் உறுதி தளராமல், வைராக்யத்துடன் மார்பினால் உந்தியும், உடலால் புரண்டும் சென்று கொண்டிருந்தார். அப்பரைசோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒரு முனிவர் வடிவில் அவருக்கு எதிரே தோன்றினார்."" இம்மானிடவடிவில் கயிலை செல்வது கடினம். முற்றிலும் இயலாது'' என்றார். ஆனால் அப்பர் பெருமானோ, " "ஆளும் நாயகன் கயிலையில் இருக்கைக் கண்டு அல்லால்மாளும் இவ்வுடல் கொண்டுமீளேன்'' என்று பதிலுரைத்து உறுதியுடன் தனது யாத்திரையைத் தொடர்ந்தார். அப்பரின் வைராக்யத்தை மெச்சிய முனிவர் வடிவம் கொண்ட இறைவன், ""ஓங்கும் நாவினுக்கு அரசனே! எழுந்திரு! இதோ இங்குள்ள பொய்கையில் மூழ்கித் திருவையாற்றை அடைந்து நாம் கயிலையில் இருக்கும் கோலத்தைக் காண்க'' என்று அருளிச்செய்து மறைந்தார். அங்கு உடனே தடம்புனல் ஒன்று நாவரசர் முன்தோன்றிற்று. அதில் மூழ்கிய அவர் திருவையாற்றில் கோயிலுக்கு வடமேற்கே சமுத்திரதீர்த்தம் என்றும், உப்பங்கோட்டை பிள்ளை கோயில் குளம் என்றும் வழங்கும் அப்பர்குட்டை திருக்குளத்தின் மீது உலகெல்லாம் வியக்குமாறு எழுந்தார். திருக்கயிலையில் சிவபெருமான் வீற்றிருக்கும் காட்சியைக்கண்டு நெகிழ்ந்தார். உமாதேவியுடன் வீற்றிருந்த சிவபெருமானைக் கண்ணாரக் கண்ட நாவரசர் தேனொழுகும் திருப்பதிகங்களும், தாண்டகங்களும் பாடலானார். காணப்படுவனயாவும் சிவமும், சக்தியுமாய் காட்சி தருவதை வியந்தவர், ""மாதர்ப்பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிய போதொடு நீர்சுமந்து எத்திப் புகுவார் அவர் பின்புகுவேன்'' என்று பாடி சிவானந்தப் பேரின்பத்தில் திளைத்து இன்புற்றார். "கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்' என்று தான் கண்டகாட்சிகளை நமக்கும் தனது பதிகம் மூலம் காண்பிக்கிறார்.

மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர்சுமந்தேத்தி, புகுவார் அவர் பின்புகு வேன்
யாதும் சுவடுபடாமல் ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்.
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.


அப்பர் பெருமானின் உழவாரத் திருத்தொண்டிற்கும் உள்ளத்தின் உறுதிப்பாட்டிற்கும் அடிமைத்திறத்திற்கும் உவந்து திருக்கயிலையே திருவையாற்றுக்கு வந்தது. இன்றும் திருவையாற்றில் ஆடி அமாவாசை நாளில் கயிலைக் காட்சி விழா நடைபெறுகிறது.

திருவையாற்றில் கயிலைக் காட்சி கண்டால் கயிலாயம் தரிசித்த புண்ணியம் பெறலாம். மேலும் திருக்கயிலைக்கு யாத்திரை மேற்கொண்டவர்கள் திருவையாற்றுக்கு வந்து தரிசித்தால் கயிலையை தரிசித்த தன் புண்ணியம் கிடைக்கும்.திருவையாற்றில் ஆடி அமாவாசையில் அப்பர் கயிலாயக்காட்சி விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்று முழுவதும் இடையறாது திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடக்கும். காலை 7 மணி அளவில் சிவ பூஜையும், பகல் 12 மணி அளவில் காவிரியில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரியும், அபீஷ்டவரத மகாகணபதி சந்நிதிக்கு எதிரில் இருக்கும் திருக்குளத்தில் (உப்பங்கோட்டை) அப்பர் எழுந்தருளிதீர்த்த வாரியும், இரவு 9 மணிஅளவில் ஐயாறு ஆலயத்தில் அப்பர்பெருமானுக்கு திருக்கயிலாயக் காட்சி கொடுத்தருளுதலும் நடைபெறும். அதற்கு முன் சந்நிதியின் மண்டபத்தில் 200க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் கூடி அப்பரின் பதிகங்களான கூற்றாயினவாறு, சொற்றுணைவேதயன், தலையேநீவணங்காய், வேற்றாகிவிண்ணாகி, மாதர்பலிறைக்கண்ணியினை ஆகிய ஐந்து பதிகங்களை பக்கவாத்தியத்துடன் இசைத்து ஆராதனை செய்வார்கள். ""யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது'' என்ற அப்பரின் திருவாக்கின் படி நாமும் இந்நாளில் திருவையாறு சென்று திருக்கயிலைக் காட்சியைக் காண்போம்.

அமைவிடம்:தஞ்சாவூரிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவையாறு. தஞ்சை, கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

(சமுத்திரதீர்த்தம், உப்பங்கோட்டை பிள்ளை கோயில் குளம)
(திருநாவுக்கரசர்)
ஓம் நம சிவாய

No comments:

Post a Comment