கோவில் வரலாறு
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கட்டுவதற்கு முன்பாக அந்த இடத்தின் பின்புறம் தஞ்சைபுரீஸ்வரர் கோவில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு சமயம் இலங்காபுரியை ஆட்சி செய்து வந்த ராவணன், தான் பெற்ற தவ வலிமையால், குபேரனுடைய செல்வங்கள் அனைத்தையும் கவர்ந்து சென்றான்.
இதனால் செல்வங்களை இழந்த குபேரன் அனாதைபோல் ஆனார். இழந்த செல்வங்களை திரும்பப்பெறும் வகையில் பூலோகத்தில் உள்ள ஒவ்வொரு சிவாலயங்களாகச் சென்று ஈசனை தரிசனம் செய்து வந்தார். அவ்வாறு தஞ்சையில் உள்ள சிவபெருமானை வழிபட்டு அங்கேயே தஞ்சம் புகுந்தான்.
இதன் காரணமாக அந்த ஈசன் தஞ்சபுரீஸ்வரர் என்றும் தஞ்சம் அடைந்தவர்களைக் காப்பாற்றும் வல்லமை படைத்த ஈசனே தஞ்சபுரீஸ்வரராக அருள்தருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் குபேரன், ஈசனை தஞ்சம் அடைந்ததால் அந்த ஊர், தஞ்சஊர் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் தஞ்சாவூர் என்று மருவிவிட்டதாக தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
குபேரன் இந்த தல ஈசனை வழிபட்டதன் காரணமாக குபேரபுரீஸ்வரர் என்றும் இறைவன் அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்திற்கு குபேரன் வந்து தங்கியதைக் குறிக்கும் வகையில் சுவாமி சன்னிதிக்கு முன்புறம் வலது தூணில் குபேரன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment