Wednesday, February 20, 2013
விசுவரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
கோவில் வரலாறு
ராமாயண இதிகாச காலம் முடிந்து விட்டது. ராமச்சந்திரமூர்த்தியான ராமபிரான் தன் அவதார நோக்கமும், அவதாரத்தின் பயணமும் நிறைவடைந்ததை அடுத்து வைகுண்டம் செல்ல முடிவு செய்தார். அப்போது தன்னுடன் ஆஞ்சநேயரையும் அழைத்துச் செல்ல விரும்பினார் ராமர். ஆனால் அதனை ஏற்க மறுத்து விட்டார் வாயு புத்திரன்.
ராம நாமம் உச்சரிக்கப்படும் இப்பூவுலகமே எனக்கு எப்போதும் ஏற்ற இடம் என்று கூறி, புண்ணிய பூமியால் இந்த பாரத பூமியில் வாழ்ந்து கொண்டிருப்பவர் ஆஞ்சநேயர். விசுவரூப பஞ்சமுக அனுமன்....... ராமர் மேல் தான் வைத்திருக்கும் அன்பை நெஞ்சை பிளந்து காட்டி அனைவருக்கும் பறைசாற்றிய அனுமனுக்கு இப்பூவுலகில் கோவில் இல்லாத இடம் எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை.
ஏனெனில் அனுமனை வணங்கினால் அவரது அனுக்கிரகம் மட்டுமின்றி, தன் அன்பனை வேண்டியவர்களுக்கு தனது அனுக்கிரகத்தையும் சேர்த்து வழங்குவார் ராமபிரான். ஆஞ்சநேயரை அவர் புகழ் பாடி வணங்குவதை விட, ராம துதி பாடியே அனைவரும் வணங்குகிறோம். எனவே ராம, ஆஞ்சநேயர் இருவரின் அனுக்கிரகமும் பக்தர்களுக்கு கிடைத்து விடுகிறது. சென்னை அடுத்துள்ள திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது விசுவரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்.
பிரம்மாண்ட ரூபமாய் ஓங்கி உயர்ந்து நிற்கும் இந்த ஆஞ்சநேயர் 32 அடி உயரம் கொண்டவர். அவர் நிற்கும் 10 அடி உயர பீடத்தையும் சேர்த்து 42 அடி உயரத்துடன், பத்து கரங்களுடன் காட்சியளிக்கிறார் இந்த விசுவரூப பஞ்சமுக ஆஞ்சநேயர். ஒன்பது கரங்களில் பல்வேறு ஆயுதங்களை தாங் கியும், 10-வது கரத்தில் அபயஹஸ்தமாகவும் காட்சி தந்து அருள்பாலித்து வருகிறார்.
சிவ பூஜையில்
பழங்கால ஓலைச்சுவடிகளில் திருவள்ளூர் தலமானது ருத்ரவனம் என்றும், இங்கு அகத்தியர் உள்ளிட்ட பல மகரிஷிகள் தவம் செய்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அகத்தியர் ஒரு முறை இங்கு சிவ பூஜையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக சஞ்சீவிமலையை தூக்கிக் கொண்டு சென்ற ஆஞ்சநேயர், ஒரு கணம் அந்த பூஜையில் பங்கேற்றார் என்றும் அறியப்படுகிறது.
இதன் காரணமாக இந்த பகுதியில் விசுவரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோவில் கட்டப்பட்டுள்ளது. ஓங்கிஉயர்ந்த இந்த பஞ்சமுக திருமேனியனுக்கு ஆகம விதிகளின்படி நித்திய பூஜைகள் மற்றும் விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் இந்த கோவிலுக்கு அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து விசுவரூப பஞ்சமுக ஆஞ்சநேயரை தரிசனம் செய்து செல்கின்றனர்.
பஞ்சமுக சிறப்பு
பஞ்சமுக ஆஞ்சநேயரின் ஐந்து முகங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச்சிறப்பையும், சக்தியையும் கொண்டுள்ளன. கிழக்கு திசையை பார்த்தபடி இருக்கும் முகம் பாவங்களின் கறைகளை நீக்கி தூய்மையான மனத்தை அளிக்கும். தெற்கு பார்த்த முகம் நரசிம்ம சுவாமியின் முகமாகும். இது எதிரிகளின் பயத்தை போக்கி வெற்றியை கொடுக்கும். மேற்கு பார்த்த முகம் மகாவீர கருட சுவாமியின் முகமாகும்.
இது தீய சக்திகள் பில்லி, சூனியம் போன்றவற்றின் ஆதிக்கம், உடலில் உள்ள விஷத் தன்மைகளை விலகிப் போகச் செய்யும். வடக்கு பார்த்த முகம் லட்சுமி வராக மூர்த்தியின் முகமாகும். இது கிரகங்களால் ஏற்படக் கூடிய கெட்ட விளைவுகளை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்க வழி செய்யும். வானத்தை நோக்கியபடி அமைந்த முகம் ஹயக்ரீவ சுவாமியின் முகமாகும். இவர் ஞானம், வெற்றி, முக்தி, நல்ல சந்ததிகளை வழங்குவார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment