உலக சுழற்சியை முன்னெடுத்துச் செல்லும் சூரியனின் உதயமும், அஸ்தமனமும் நடைபெறும் இடம் என்ற வகையிலும், முக்கடல் சங்கமிக்கும் மகத்துவம் மிகுந்த இடம் என்ற வகையிலும் இந்தியத் திருநாட்டின் தென் கோடியில் உள்ள கன்னியாகுமரியின் சிறப்பு மேலோங்கி நிற்கிறது.
இந்த சிறப்புகளை காண்பதற்காகவே கன்னியாகுமரியில் ஒவ்வொருநாளும் காலை மற்றும் மாலை வேளைகளில் கூடும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமானது. இந்த சிறப்புகளை எல்லாம் தனக்குள் அடக்கியபடி மெல்லிய சிரிப்புடன் கடற்கரையோரம் கொலுவிருக்கும் பகவதி அம்மன் சிறப்பு பிரசித்தமானது.
இங்குள்ள பகவதி அம்மன் கன்னியாக இருந்தாலும், பக்தர்கள் அனைவருக்கும் தாயாக இருந்து அனைத்து துன்பங்களையும் போக்கி வருகிறாள். அவள் கன்னியாக அமர்ந்த கதையைக் இங்கு காணலாம்.
பாணாசுரன் அட்டகாசம்
'கன்னிப் பெண் ஒருத்தியை தவிர, வேறு எவராலும் தனக்கு மரணம் நிகழக்கூடாது' என்ற வரத்தை பிரம்ம தேவரிடம் இருந்து பெற்றவன் பாணாசுரன் என்னும் கொடிய அசுரன். ஒரு கன்னிப் பெண் தன்னை என்ன செய்து விட முடியும் என்ற எண்ணத்தினால், அவன் பெற்ற அந்த வரத்தை வைத்துக் கொண்டு தேவர்களையும், முனிவர்களையும் படாதபாடு படுத்தினான் பாணாசுரன்.
தேவர்களும், முனிவர்களும், தங்கள் துன்பங்களை துடைத்தருளும்படி மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். அவரோ, 'பாணாசுரன், கன்னிப்பெண்ணால் தான் தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்று வரம் பெற்றுள்ளான். ஆகையால் உங்களுக்கு அந்த மகேசனின் அருகில் அமர்ந்துள்ள மகேஸ்வரியால்தான் உதவ முடியும்' என்று உபாயம் கூறினார்.
கன்னியாக தேவி இதனால் அனைவரும் அன்னை பார்வதியை வேண்டி யாகம் செய்தனர். யாகத்தின் நிறைவில் ரிஷப வாகனத்தில் சிவபெருமானும், பார்வதி தேவியும் காட்சியளித்தனர். அம்மையப்பன் இருவரையும் கண்டதும் ஆனந்தக்கூத்தாடினர் தேவர்களும், ரிஷிமுனிவர்களும்.
அவர்களைப் பார்த்து, 'அன்பர்களே! தங்களின் குறையை நான் அறிவேன். உங்கள் துயரங்கள் விலகும் வேளை வந்து விட்டது. எனது தேவியானவள், தென் பகுதியான குமரியில் ஒரு கன்னியாக வடிவெடுத்து, பாணாசுரனை வதம் செய்து உங்களுக்கு வாழ்வளிப்பாள்' என்று ஆசி கூறினார் சிவபெருமான். அவ்வாறு கன்னியாக வந்துதித்தார் அன்னை பார்வதி தேவி.
அவர் ஈசன் மேல் பற்று கொண்டு அவரை நோக்கி கடுமையாக தவம் இருந்து வந்தார். அப்போது தேவியின் அழகில் மயங்கிய சுசீந்திரம் தாணுமாலயன், தேவியை மணம் புரியவேண்டி தேவர்களை அழைத்து பேசினார். ஆனால் தேவர்கள் கலக்கம் கொண்டனர்.
'ஈசன், தேவியை மணம் புரிந்து விட்டால், அவர் எப்படி கன்னியாக இருப்பார். பாணாசுரனை அழிக்க ஒரு கன்னியால் அல்லவா முடியும்?' என்று எண்ணிய தேவர்கள் அனைவரும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து போயினர்.
திருமண திருவிளையாடல்
அவர்களின் கலக்கத்தை நாரதர் போக்கினார். 'எல்லாம் நல்லபடியாக நடைபெறும். பாணாசுரன் அழிவு என்ற உங்களின் நோக்கம் நிறைவேறும். அதற்கான முதற்படிதான் இது' என்று தேவர்களுக்கு நாரதர் ஆறுதல் கூறினார். ஆம்! தவத்தில் இருக்கும் தேவியை கோபமூட்டுவது என்பது இயலாத காரியம்.
எனவேதான் சிவபெருமான் தேவியை மணம் முடிக்க பேசி கவனத்தை திருப்பி, ஏதாவது காரணத்தால் திருமணம் நிறுத்தப்பட்டால் தேவியின் கோபம் உச்சத்தை எட்டும். அப்போது அங்கு வரும் பாணாசுரன் நிச்சயமாக அழிந்துபோவான். அதற்காகத் தான் சிவபெருமான் திருமண திருவிளையாடலை கையில் எடுத்திருந்தார்.
அந்த திருவிளையாடல் விதிப்படி திருமணப் பேச்சின் போது சிவபெருமானிடம், தேவர்கள் சார்பில் நாரதர் ஒரு கோரிக்கை வைத்தார். 'சூரிய உதயத்திற்கு ஒரு நாழிகை முன்னதாகவே மாப்பிள்ளை திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்து விட வேண்டும்' என்பதுதான் அது. தேவியிடமும், இந்த கோரிக்கை கூறப்பட்டது. சூரிய உதயத்திற்கு ஒரு நாழிகை முன்பு மாப்பிள்ளை வரவில்லை என்றால் திருமணம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கோபத்தில் கொந்தளித்த தேவி மண நாள் வந்தது. சுசீந்திரத்தில் இருந்து அனைத்து சீதனங்களுடன் குமரி நோக்கி புறப்பட்டுச் சென்றார் ஈசன். அப்போது குறித்த நேரத்திற்கு முன்பாகவே நாரதர் சேவலாக மாறி உரக்க கூவினார். சேவல் கூவிவிட்டதால் சூரிய உதயத்திற்கு முன்பாக எப்படியும் குமரியை அடையவழியில்லை என்பது ஈசனுக்கு புலப்பட்டது.
எனவே அவர் மீண்டும் சுசீந்திரம் திரும்பிச் சென்று விட்டார். இதுபற்றி அறிந்ததும் ஈசனுக்காக காத்திருந்த தேவியின் காதல் கலந்த கண்கள், கோபத்தில் சுட்டெரிக்கும் சூரியனைப் போல் தகதகக்கத் தொடங்கியது. திருமணத்திற்காக சமைத்த அனைத்து சாதங்களையும் கடலிலும், கரையிலும் வீசி, மண்ணாய் போக சபித்தார் தேவி. பின்னர் கோபம் அடங்காமல், தவத்தை மேற்கொள்ள எண்ணினார்.
பாணாசுரன் வதம் அந்த நேரம் பார்த்து அங்கு வந்த பாணாசுரன், தேவியின் அழகில் மயங்கி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினான். மேலும் தேவியை தொடும் எண்ணத்தில் நெருங்கியவனை, அவள் பார்த்த பார்வை நெருங்கவிடாமல் அனலில் தகிக்கச் செய்தது. ஓங்கி உயர்ந்து, வீராவேசமாய் சிரித்த தேவி, பாணாசுரனை தன் காலால் மிதித்து வதைத்தார்.
தேவர்கள் அனைவரும் வானுலகில் இருந்து தேவிக்கு பூமாரி பொழிந்தனர். இதனால் தேவி கோபத்தை விடுத்து மனம் குளிர்ந்தாள். கன்னியாகுமரியில் கன்னியாய் அமர்ந்திருக்கும் இந்த தேவி பகவதி அம்மனிடம் தங்கள் குறைகள் நீங்கி நன்மை விளைய எண்ணுவோர், பூச்சொரிதல் நடத்தினால், அவர்கள் வேண்டிய வரங்கள் எளிதில் நடைபெறும் என்பது நம்பிக்கை.
குமரி பகவதியிடம் வேண்டியவை அனைத்தும் கிடைக்கும். பகவதி இன்றும் ஈசனை வேண்டி, உலகம் உய்ய தவம் செய்வதாக கூறப்படுகிறது. எனவே தேவியிடம் நாம் வேண்டும் அனைத்தும், ஈசனிடம் கொண்டு சேர்க்கப்படும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.
கன்னியாய் குமரித்தாய்
முக்கடலும் முத்தமிடும் குமரிக்கடலில் நீராடி, பரசுராம விநாயகரை வணங்க வேண்டும். பின்னர் மாயம்மா என்னும் பெண் சித்தரை வணங்கி, ஆதிசங்கரரை தரிசிக்க வேண்டும். பின்னர் ஆலயத்தின் வடக்கு வாசல் வழியாக சென்றால் கருவறையில் அன்னை கன்னியாகுமரியை தரிசிக்கலாம்.
அவள் இரண்டு கரங்களுடன் கிழக்கு நோக்கிய வண்ணம் நின்ற தவக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த தேவியானவள், பாவாடை, தாவணி உடுத்தி, பிறைமதி சூடி, மூக்கில் வைர மாணிக்க மூக்குத்தி ஜொலிக்க வலது கரத்தில் இலுப்பைப்பூ மாலையும், இடது கரத்தை இடது தொடையிலும் பொருத்தி வீற்றிருக்கிறாள்.
வாடா விளக்கு
குமரி பகவதியின் விக்கிரகத்தின் மேல் பகுதி சொரசொரப்பாக காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பை ருத்ராட்ச விக்கிரகம் என்று அழைக்கிறார்கள். அம்மன் சன்னிதி முன்பு 'வாடா விளக்கு' ஒளிர்ந்து கொண்டே இருக்கும். இந்த விளக்கில் தொடர்ச்சியாக 9 வெள்ளிக் கிழமைகள் நெய் சேர்த்து வந்தால் பொன், பொருள், நிலம் வாங்கும் யோகம் அமையும் என்பது நம்பிக்கை.
அதே போல் 9 செவ்வாய்க்கிழமை சந்தனாதி தைலம் சேர்த்து வந்தால் திருமணத் தடை அகலும். சந்தான பாக்கியம் கிட்டும். தொடர்ச்சியாக 9 புதன் கிழமைகள் நல்லெண்ணெய் சேர்த்து வந்தால் கடும் பிணிகளும் அகலும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
( இந்த கன்னியாய் தவமிருக்கும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று (27-ந் தேதி) புதன் கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. )
No comments:
Post a Comment