ஸ்தல வரலாறு
கோவில்கள் நிறைந்த கும்பகோணம் மாநகரில் காவிரியின் தென் கரையில் திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. சக்கரபாணி கோவில்.இந்திய துணைக் கண்டத்தில் ஸ்ரீசக்கரபாணி சுவாமிக்கு என்று அமைந்த ஒரே தனிக் கோவிலாக விளங்குகிறது. ஒவ்வொரு பெருமாள கோவிலிலும் சக்கரத்தாழ்வார் வீற்றிருப்பார்.
ஆனால் சக்கரபாணி கோவிலில் சக்கரத்தாழ்வாரே மூலவராக (சக்கரபாணியாக) வீற்றிருக்கிறார். மகாவிஷ்ணு தரித்துள்ள ஆயுதங்களுள் சங்கு, சக்கரம், சுதை, வில், வாள் ஆகிய ஐந்தும் மகிமை வாய்ந்தன.அவற்றை ஐம்படைகள் என்று சிறப்பாக அழைப்பது வழக்கம். திருமாலின் வலக்கரத்தில் காணப்படும் சக்கரத்தில் உறையும் தேவன் சுதர்சனர் எனப்படுகிறார்.
ஸ்ரீசக்கரம் திருமாலின் அம்சமாக இருப்பதால் இச்சுதர்சனரை சக்கர ரூப விஷ்ணு எனவும் குறிப்பிடுவர். பஞ்சாயுதங்களுக்கும் அரசனாக விளங்குவதால் அவருக்கு ஹேதிராஜன், சுதர்சன ராஜன் ஆகிய பெயர்கள் வழங்குகின்றன. திருமாலின் பஞ்சாயுதங்களுள் ஒன்றான சக்கரத்திற்கு உரிய சுதர்சனர் உக்கிர வடிவானவர்.
இவரே சக்கரத்தாழ்வார், சக்கர ராஜர், சக்கரபாணி சுவாமி என வழிபடப்படுகிறார். புருஷார்த்தங்கள் நான்கினையும் வழங்கும் வள்ளலாக திகழும் ஸ்ரீசுதர்சனர் முக்கிய மூர்த்தியாக நின்று அருள்பாலிக்கும் கோவிலே சக்கரபாணி சுவாமி கோவில் என வழங்கப்படுகிறது. இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
ஜலந்தராசுரன் என்னும் அசுரனை அழிக்கும் பொருட்டு விஷ்ணுவால் அனுப்பி வைக்கப்பட்ட சக்கரம் பாதாள உலகத்தில் ஜலந்தராசுரனை அழித்து கும்பகோணத்தில் காவிரியின் நடுவில் பூமியை பிளந்து கொண்டு வெளிக் கிளம்பிய ஸ்ரீசக்கரம் பண்ணிய நல் விரதமெல்லாம் பலிக்க புண்ணிய தலமான கும்பகோணத்தில் காவிரியின் தென் கரையில் நீராடிக் கொண்டிருந்த பிரம்மனின் கரத்தில் வந்தமர்ந்தது.
இதனால் பெரு மகிழ்ச்சி அடைந்த பிரம்மதேவனும், ஸ்ரீ சக்கரத்தை காவிரிக் கரையிலேயே பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தான். காவிரியின் தென் கரையில் பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரம் மிகுந்த ஒளியுடன் பிரகாசிக்க சூரியன் ஸ்ரீ சக்கரத்தின் ஒளியை கண்டு தன்னை விடவும் ஒன்று தன்னைவிட பல மடங்கு அதிகமாக பிரகாசிப்பதை கண்டு கர்வமுற்று தன்னொளியை கூட்ட ஸ்ரீசக்கரம் கோடி சூரிய பிரகாசத்துடன் பேரொளி விடுத்து ஆதவனின் ஒளியை தன்னொளியில் அடக்கி சூரியனின் ஆணவத்தை அழிக்க சூரியன் ஒளியற்றவனாகவும் பலமற்றவனாகவும் ஆனான்.
ஒளியிழந்த சூரியன் தன்னொளி தனக்கு மீண்டும் கிடைக்க ஸ்ரீசக்கரத்தையே சரணடைந்து பிரார்த்திக்க வைகாசி மாத பவுர்ணமி திதியில் ஸ்ரீ சக்கரத்திலிருந்து சக்கரபாணி சுவாமி 3 கண்களுடனும், 8 கைகளுடனும் அக்னி மயமான கேசத்துடன் காட்சி தந்து ஆதவனின் ஒளியை மீண்டும் தந்து அருள் செய்தார்.
தன்னுடைய பெயரில் பாஸ்கரஷேத்திரம் என இத்தலம் அமையப் பெற வேண்டும் என வர பெற்ற சூரியன் சக்கரபாணி சுவாமிக்கு கோவில் நிர்மாணித்து பாஸ்கர ஷேத்திரம் என்னும் இத்திருத்தலத்தை வழிபாடு செய்தான். சூரியனும் வைகாசி மாதத்தில் கொடியேற்றி பாஞ்சராத்ர ஆகம நெறிப்படி உற்சவமும் செய்வித்தான். இன்று ஸ்ரீ சக்கரம் காவிரியில் தோன்றிய இடம் சக்கர தீர்த்தம் என்றும் சக்கர படித்துறை என்றும் வழங்கப்டுகின்றன.
No comments:
Post a Comment