Menu

Thirupathi Seva Online Live

Monday, January 21, 2013

பசுவந்தனை கோவில்


தலச்சிறப்பு

       பசுவந்தனை திருத்தலம், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர். இவ்வூர் மதுரை-நெல்லை ரெயில்வே வழியில் கடம்பூர் ரெயில் நிலையத்திலிருந்து கிழக்கே 10 கிலோ மீட்டர் தூரத்திலும், மதுரை-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், கயத்தாறில் இருந்து கிழக்கே 21 கி.மீ. தூரத்திலும், தூத்துக்குடி-மதுரை நெடுஞ்சாலையில் எப்போதும் வென்றானிலிருந்து மேற்கே 11 கி.மீ. தூரத்திலும் அமைந்து உள்ளது.

சிறப்புமிக்க இத்தலம் பசுவந்தனை அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலாகும். முழுவதும் கல்லினால் கட்டப்பட்டுள்ள திருக்கோவிலாகும். இத்திருக்கோவில் இரண்டாம் மாறவாமன் சுந்தரபாண்டியனின் ஏழாம் ஆட்சி காலத்தில் கி.பி.1245-ல் கட்டப்பட்டது எனவும் ஆலால சுந்தரப் பெருமாள் என்பவன் சிவனுக்கு கோவில் எழுப்பி நிலங்களை அளித்தான் எனவும், இத்தலத்திற்கு முதுகுடி நாட்டு பசுந்தலை, பவித்திர மாணிக்கப்புரம் என்ற பெயர்களும் உண்டு.

காசியில் சிறந்தது கயிற்றாறு என்னும் புண்ணிய நாடு. அதனை ஆண்டு வந்த மன்னன் ஆநிரைகளைப் போற்றி வந்தான். பசுக்கூட்டங்கள் மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் தினமும் புல் மேய்வது வழக்கம். அந்த  பசுக்கூட்டத்தில் ஒரு பசு அங்குள்ள ஒரு குளத்தில் நீராடி வில்வ மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது பாலைச் சொரிந்து விட்டு பின்னர் பசுக்கூட்டத்தில் வந்து சேர்ந்து விடும். தினமும் இந்த நிகழ்ச்சியால் பால் குறைவதை அறிந்த மன்னன் காவலர்களை அனுப்பி உண்மையைக் கண்டறிந்தான்.

இறையுணர்வு மிக்க தனது பசுபால் சொரியும் இடத்தை சென்றடைந்த மன்னன் அங்கிருந்த சிவலிங்கத்தைக் கண்டு பணிந்து வணங்கினான். இரவு படையுடன் அங்கு தங்கியிருந்த மன்னன் வானவர்கள் வந்து அந்த சிவலிங்கத்தை அர்ச்சித்து வழிபாடு செய்ததைக் கண்டு மெய் உருகி வழிபட்டான். பசுபால், சொரிந்து வானவர்கள் வழிபட்ட சிவலிங்கத்திற்கு அந்த இடத்திலேயே ஆலயம் ஒன்று எழுப்ப முனைந்தான்.

அதன்படி அந்த இடத்தில் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறியதாக ஓர் ஆலயம் அமைத்து அதனைச்சுற்றி முறைப்படி வீதிகள் அமைத்தான். நகரமாக ஆக்கினான். பசு அருகில் வந்து பால் சொரிந்து வளர்த்ததும் வானவர்கள் வந்து தினமும் வழிபட்ட சிவலிங்கங்கள் உள்ள இத்திருத்தலம் பசுவந்து அணை எனப் பெயர் பெற்று பின்னர் பசுவந்தனை என அழைக்கப் பெறலாயிற்று.

பசு வந்து நீராடிய குளம் சிவதீர்த்தம் என்றும் கோசிருங்காவாவி என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருத்தல மூர்த்தியின் சிறப்பை உணர்த்தும் உண்மைச் சம்பவம் ஒன்று உள்ளது. எட்டையபுரத்திற்கு அருகிலுள்ள தெற்கு முத்தலாபுரம் என்ற கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பாநாயக்கர் என்பவர் நன்றாக இருந்த அவரது இரு கண்களும் பார்வையை இழந்து விட்டன.

அவர் இத்திருத்தலத்து இறைவன் மீது கொண்ட பக்தியினால் கோவிலுக்கு வந்து தினசரி வாவியில் நீராடி ஈசனை வழிபட்டு 41 நாட்கள் மணசோறு உண்டு விரதமிருந்தார். 42-வது நாள் அவரது இரு கண்களும் இறையருளால் பார்வை வரப்பெற்றன. இந்நிகழ்ச்சியினால் இத்தலத்து இறைவன் இப்பகுதி மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார்.

பசுவின் பாலை அருந்தி வளர்ந்த சுவாமிக்கு பசும்பால் அபிசேகம் செய்து வழிபட்டால் வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறி வருகிறது என்பதால் இëத்தலமூர்த்திக்கு அன்பர்களால் தினசரி பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. இத்திருக்கோவில் முன்பு சங்குச்சாமி சித்தர் `ஜீவ சமாதி' அமைந்துள்ளது. பழமையும் சிறப்பும் மிக்க கோசிருங்கவாளி தீர்த்தத்தில்தான் ஆதிகாலத்தில் இறையுணர்வு மிக்க பசு ஒன்று தினசரி நீராடி பால் சொரிந்ததால்தான் இத்தலத்திற்கு பசுவந்தனை என்ற பெயர் ஏற்பட்டது.

இந்த தீர்த்தம் கங்கை நீரைப்போல புனிதமாகக் கருதப்படுகிறது. ஆண்டு தோறும் சித்திரை புதுவருட தினத்தன்று இவ்வூர் மற்றும் சுற்று வட்டார ஊர்களில் இருந்து மக்கள் வந்து கூடி இத்திருக்குளத்தில் புனித நீராடி இறைவனை வழிபட்டு இறைவன் முன்பு புதிய பஞ்சாங்கத்தை சமர்ப்பித்து புத்தாண்டு பொலிவுடன் விளங்கவும், விவசாயம் சிறக்கவும் வேண்டுகின்றனர்.

No comments:

Post a Comment