Monday, February 4, 2013
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்
கோவில் வரலாறு
நம் தமிழ் நாட்டில் அம்மன் ஆலயங்கள் ஏராளம். இந்த அம்மன்கள் யாவரும் உமையவளின் மறு உருவே என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட ஒரு அம்மனின் ஆலயம் கோடாலி கருப்பூர் என்ற கிராமத்தில் உள்ளது. கும்பகோணம் அணைக்கரை நெடுஞ்சாலையில் அணைக்கரையிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது கோடாலி கருப்பூர் என்ற இந்த தலம்.
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் என்ற இந்த ஆலயம் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே நுழைந்தவுடன் பெரிய குதிரை சிலை ஒன்று நம் கண்களைக் கவரும். நுழைவு வாயிலின் வலதுபுறம் ஆலயத்தின் தலவிருட்சமான அரசும், வேம்பும் செழித்து ஓங்கி வளர்ந்துள்ளன. தலவிருட்ச மேடையில் நாகர், விநாயகர், பாவாடைராயன் திருமேனிகள் உள்ளன.
அடுத்துள்ள மகாமண்டபத்தின் வலதுபுறம் காட்டேரி அம்மன், சங்கிலி கருப்பன் சன்னதிகளும் இடதுபுறம் பாவாடைராயன் வீரன், மயானபுத்ரன் சன்னதிகளும் உள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலில் இரு துவாரபாலகிகளின் சுதை வடிவ சிலைகள் உள்ளன.
தவிர அர்த்த மண்டபத்தின் உள்ளே வலதுபுறம் பாலமுருகன், வீரபத்பரன் திருமேனிகளும் இடதுபுறம் பிள்ளையார் திருமேனிகளும் உள்ளன. உள்ளே அன்னை அங்காள பரமேஸ்வரி அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் புன்னகை தவழ அருள் பாலிக்கிறாள். அன்னையின் மேல் வலது கரத்தில் உடுக்கையும், மேல் இடது கரத்தில் சூலமும், கீழ் வலது கரத்தில் கத்தியும், கீழ் இடது கரத்தில் கபாலமும் கொண்டு இடையே சூலாயுதத்துடன் அன்னை காட்சி தருகிறாள்.
தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடக்கிறது. சித்ரா பவுர்ணமி அன்று இந்த ஆலயம் விழாக் கோலம் பூண்டிருக்கும். சுற்று வட்டார மக்கள் சுமார் 1000 பேர் பால் குடம் சுமந்து ஆலயம் வர, அன்னைக்கு அன்று குளிரக்குளிர பாலபிஷேகம் நடைபெறும் காட்சியைக் காண கண் கோடி வேண்டும். ஆடி மாதம் மற்றும் தை மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை இங்கு திருவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடை பெறுகிறது.
ஆடி மாதம் உத்திராட நட்சத்திரத்தன்று அன்னை வீதி உலா வருவதுண்டு. அன்னையின் பிரகாரத்தின் கீழ் திசையில் துர்க்கையம்மனும், தென் திசையில் ருத்ர மகேஸ்வரியும், மேல் திசையில் வைஷ்ணவியும் அருள்பாலிக்கின்றனர். இந்த மூன்று தேவிகளின் திருமேனிகள் காண்பவரை சிலிர்க்க வைப்பது நிஜம். அத்தனை அழகுடன் விளங்குகிறது இத் திருமேனிகள்.
ஆலயத்தின் மேல் திசையில் அழகான அன்னதான மண்டபம் உள்ளது. காது குத்தல் போன்ற விழாக்களை மக்கள் வேண்டிக்கொண்டு இங்கு வந்து நிறைவேற்றுகின்றனர். குழந்தை பேறு வேண்டியும், பிணி நீங்கி சுகம் பெறவும், திருமணத் தடை நீங்கவும் அன்னையிடம் வந்து வேண்டிக்கொண்டு பக்தர்கள் பலன் பெறுகின்றனர். தவிர அயல் நாடு செல்ல விரும்புவோர் அன்னையிடம் வந்து முறையிட்டால் அவர்கள் வேண்டுதல் விரைந்து பலிப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment