Menu

Thirupathi Seva Online Live

Monday, February 4, 2013

கோட்டை பைரவர் கோவில்


கோட்டை பைரவர் கோவில்
கோவில் வரலாறு

புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் என்னும் தலத்தில் ஸ்ரீ கோட்டை பைரவர், கால பைரவ அம்சமாக இருந்து அருள்பாலித்து வருகிறார். சிவபெருமான் அவதாரம் கொண்டதாக ஆகமங்கள் இயம்புகின்ற இக்கோட்டை பைரவரிடம் வேண்டுதல் செய்வோருக்கு கைமேல் பலன் கிடைக்கும் என்பது இங்கு வந்து நினைத்ததை நிறைவேற்றிக்கொண்டவர்கள் கூறும் தகவல்.

கோட்டை பைரவர்  ராமநாதபுரம் சீமையை ஆண்ட கிழவன் சேதுபதி என்பவரால் திருமெய்யம் கோட்டையானது கட்டப்பட்டது. அப்போது கோட்டையின் தென்புற பிரதான வாசலில் சக்தி விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் சன்னிதிகள் அமைக்கப்பட்டன.

அந்தக் கோட்டையின் வடபுறத்தில் கோட்டை பைரவர் கோவில் அமைக்கப்பட்டு எழிலுற காட்சியளிக்கிறது. மறவன் கோட்டை எனப்படும் கோட்டையும், கோட்டையின் உள்ளேயும், வெளியேயும் வாழும் சகல ஜீவராசிகள் அனைவரும் நற்பேறு அடையும் விதமாக கோட்டை பைரவர் அருள்பாலித்து வருகிறார். தமிழகத்திலேயே வடக்கு பார்த்தபடி தனிக்கோவில் கொண்டு, பக்தர்களுக்கு அருள்புரிந்து வரும் பைரவர் இவர் ஒருவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி தோஷங்கள் தீர இந்த கோவிலின் முன்பாகச் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பு தரும் கண்கண்ட தெய்வமாக கோட்டை பைரவர் விளங்குகிறார். சகலதோஷ பரிகார தலமாகவும் இந்த கோவில்   விளங்குகிறது. அஷ்டமச் சனி, ஏழரைச் சனி உள்ளிட்ட அனைத்து விதமான சனி சம்பந்தப்பட்ட தோஷங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பைரவருக்கு அபிஷேகம், வடை மாலை, சந்தனகாப்பு செய்து நெய்தீபம், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் சனி தோஷங்கள் விலகும்.

பிதுர் தோஷங்களுக்கு பைரவருக்கு புனுகு சாற்றி எலுமிச்சை பழ மாலை அணிவித்து எள் சாத அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் பிதுர் தோஷம் நீங்கும். செவ்வாய்க்கிழமைகளில் பைரவருக்கு, செவ்வரளி மாலை அணிவித்து மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடலாம். புதன் கிழமைகளில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து புனுகு பூசி நெய் தீபம் ஏற்றி வந்தால் கல்வியில் மேன்மை பெறுவதற்கான வாய்ப்பு அதிகம்.

குழந்தைப் பேறு  திருமெய்யம் கோட்டை பைரவருக்கு சந்தனாதி தைலம் சாற்றி அபிஷேகம் செய்து சந்தனக்காப்பு, வடைமாலை சாற்றி வழிபட்டால் வியாபாரம், தொழில் போன்றவற்றில் அபிவிருத்தி ஏற்படும். மேலும் இந்த பைரவருக்கு கோடி அர்ச்சனையோ, லட்சார்ச்சனையோ செய்து வழிபட்டால் குழந்தை பேறு உண்டாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

செவ்வாய்க்கிழமை களில் ராகு காலத்தில் செவ்வரளி மாலை, நெய்தீபம் ஏற்றி தொடர்ந்து ஏழு வாரங்கள் வழிபட்டு வந்தால் சகோதர ஒற்றுமை மேலோங்கும். எல்லா பரிகாரங்களுக்கும் நெய் தீபமும், மிளகு தீபமும் பொதுவானது. தேய்பிறை அஷ்டமி அன்று கோட்டை பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

இந்த நாளில் வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு நன்மைகள் நாடி வந்து சேரும். கார்த்திகை மாதம் நடைபெறும் பைரவாஷ்டமி விழா சிறப்பு வாய்ந்தது. மத்திய தொல்லியல் ஆய்வுத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த கோவில் புதுக்கோட்டை திருக்கோவில்கள் நிர்வாக அதிகாரி மற்றும் உதவி ஆணையரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

கோவிலின் அமைவிடம்  திருச்சி-ராமேசுவரம் மெயின் ரோட்டிலும், தஞ்சாவூர்-மதுரை மெயின் ரோட்டிலும் உள்ள திருமயத்தில் புதுக்கோட்டையில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. கோவில் அமைந்து உள்ள இந்த மெயின் ரோடு வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த கோவிலின் அருகில் நின்று பைரவரின் அருள் பெற்ற பின்னரே தொடர்ந்து செல்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த கோவிலின் அருகில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை கண்கூடாக காணலாம்.

No comments:

Post a Comment