திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடியில் அமைந்துள்ள அழகிய நம்பிராயர் கோவில், தென் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்றதாகவும், பல சிறப்புகளை உள்ளடக்கியதாகவும் விளங்கும் நம்பிராயர் கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முந்தையது ஆகும். மேலும் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
திருமங்கையாழ்வார் கட்டியது
மகேந்திரகிரி என்ற மலை அடிவாரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. ராமாயண காலத்தில் ராமரும், லட்சுமணரும், வானர படைகளுடன், ராவணனுடன் போர் புரிவதற்காக தங்கிய இடம் இந்த மகேந்திரகிரி மலை என்று கூறப்படுகிறது. இந்த மலையில் இறைவனின் பாதச்சுவடு உள்ளது. ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் இந்த கோவிலை கட்டியதாக தல வரலாறு கூறுகிறது.
மேலும் வைணவ தலத்தின் குரு என்று அழைக்கப்படும் ராமானுஜரின் மந்திர உபதேசம் இந்த தலத்தில் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. திருமங்கையாழ்வார் இந்த கோவில் அமைந்த இடத்தில்தான் முக்தி நிலையை அடைந்துள்ளார். அவரது ஜீவசமாதி இங்கு அமைந்துள்ளது. நம்பாடுவான் என்ற பக்தனுக்கும், பிரம்மராஜனுக்கும் மோட்சம் கிடைத்த தலமாகவும் இது உள்ளது.
நம்பிராயர் கோவில்
இந்த கோவிலில் அமைந்துள்ள இறைவன் நம்பிராயர் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். கோவிலுக்குள் இரண்டு நம்பிகள், அதாவது இருந்த நிலையில் ஒரு நம்பியும், பள்ளி கொண்ட நிலையில் ஒரு நம்பியுமாக இறைவன் அருளாசி புரிகிறார். அருகில் தாயார் சன்னதி அமைந்துள்ளது. மேலும் இந்த ஆலயத்தில் சிவன் சன்னதியும் அமையப்பெற்றுள்ளது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எம்பெருமான் வாமன அவதாரம் எடுத்த ஸ்தலம் இது என்று போற்றப்படுகிறது. ஆழ்வார்களான திருமங்கையாழ்வார், திருமொழிசையாழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் இந்த கோவிலில் உள்ள நம்பிராயர் இறைவனை புகழ்பெற்ற பாடல்களால் பாடியுள்ளனர். நம்பிராயர் கோவிலுக்கு முன்பாக காவல் தெய்வமாக கால பைரவர் சன்னதியும் உள்ளது.
பைரவர் முகத்திற்கு மேல் இரண்டு விளக்குகள் உள்ளன. இதில் ஒரு விளக்கு அசைந்து கொண்டே இருக்கும். இது அவர் மூச்சு விடுவதால் என்று கூறப்படுகிறது. பைரவருக்கு பூச்சட்டையும், வடை மாலையும் சாத்தி பிரார்த்தனை செய்யப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி அன்று பைரவருக்கு சிறப்பு பிரார்த்தனை செய்யப்படும். ஈசானிய மூலையில் ஊர் எல்லைக் காளியாக குறுங்குடி அம்மன் கோவில் உள்ளது.
ஊரின் நடுவில் திருப்பாற்கடல் நம்பி கோவில் அமைந்துள்ளது. மேலும் நம்பிராயர் கோவிலில் தினந் தோறும் நடக்கும் பூஜைகள் சிறப்பு மிக்கது. மேலும் திருவிழாக்களும் விமரிசையாக கொண்டாடப்படும். தைப்பூசத் தினத்தில் தெப்ப உற்சவம் திருவிழா சிறப்பாக நடைபெறும்.
தை மாத திருவோண நட்சத்திரத்தில் பத்திர தீப திருவிழாவும், பங்குனி மாதத்தில் கொடியேற்றப்பட்டு 10 நாள் விழாவும் நடைபெறும். இந்த விழாவின் போது தினமும் சாமி வீதி உலா வருவார். தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுப்பார்கள்.
திருவிழாக்கள்
திருக்குறுங்குடியில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மீது மலைநம்பி கோவில் இருக்கிறது. உயரமான, இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. நம்பி மலை ஏறினால், நம்பி வரம் அளிப்பார் என்பது இந்த மலைக்கோவிலுக்கு வரும் ஒவ்வொரு பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மலைப்பாதை கரடுமுரடாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். இறைவன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று சொல்வார்கள். அதைப் போல இங்குள்ள மலையின் மீது வாசம் செய்கிறார் ஸ்ரீனிவாசப் பெருமாள். மலை மீது அமர்ந்திருக்கும் இறைவன் அழகிய நம்பி என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். நம்பி என்பது இறைவன் பெயர் என்பதால் அவர் அமர்ந்திருக்கும் மலையும், நம்பி மலை என்றே அழைக்கப்படுகிறது.
பக்தர்கள் வருகை அதிகம் கோடை காலங்களில் அனைவரும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை பகுதிகளுக்கு செல்லவே விருப்பம் தெரிவிப்பார்கள். அந்த வகையில் ஆன்மிக ரீதியாகவும், இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதி என்ற வகையிலும் நம்பி மலையில் உள்ள அழகிய நம்பியை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை எண்ணில் அடங்காதது. தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்து இந்த கோவிலுக்கு யாத்திரையாக வரும் பக்தர்கள் அதிகம். புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புரட்டாசி கடைசி சனிக்கிழமை அன்று நடைபெறும் விழாவில் பாதயாத்திரையாக நடந்து வந்து கலந்து கொள்வார்கள்.
அமைவிடம்
திருநெல்வேலி மாவட்டம், நாங்கு நேரி தாலுகா, களக்காடு ஒன்றியத்தில் அமைந்துள்ளது திருக்குறுங்குடி. குறுகிய மன்னனின் குடி என்பதால் குறுங்குடி என்று பெயர் வந்தது. இந்த ஊர் தெய்வ ஸ்தலங்கள் அமைந்த இடமாக இருப்பதால், குறுங்குடிக்கு முன்னால் திரு சேர்த்து திருக்குறுங்குடி என்றானதாக வரலாறு தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment