Menu

Thirupathi Seva Online Live

Tuesday, March 5, 2013

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
 கோவில் வரலாறு 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 6-ம் நூற்றாண்டில் உருவானது. ஆழ்வார்களில் பெண் ஆழ்வார் என ஆண்டாள் அழைக்கப்படுகிறார். மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் ஆண்டாள் பூமாதேவியாகவும் போற்றப்படுகிறார். ஆண்டாள் கிழக்குநோக்கி தனிச்சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

கிழக்குநோக்கி இருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் வாழ்க்கையில் வளம் பெருகும் என்பார்கள். எனவே ஆண்டாளிடம் வேண்டிக் கொண்டால் அனைத்தும் நடக்கும் என்பது நம்பிக்கை. மார்கழி நோன்பு இருந்த ஆண்டாள் தனது தோழியர்களை எழுப்புவது போன்ற பொருளில் 30 பாசுரங்கள் பாடினாள்.

தோழியரை ஆண்டாள் எழுப்பும் சிற்பங்கள் ஆண்டாள் சன்னதி விமானத்தில் உள்ளன. இதற்கு திருப்பாவை விமானம் என்று பெயர். ஆண்டாள் சிறுமியாக இருந்தபோது வளர்ந்த திருமாளிகையே தற்போது ஆண்டாள் கோவிலாக உள்ளது. இதனை ஆண்டாளுக்கு பெரியாழ்வார் சீதனமாக கொடுத்தார்.

எனவே இந்தகோவிலை நாச்சியார் திருமாளிகை என சொல்கிறார்கள். அனைத்து பெருமாள் கோவில்களிலும் அதிகாலையில் நடைதிறப்பின்போது திருப்பல்லாண்டும், திருப்பாவையும் பாடப்படுகிறது. திருப்பல்லாண்டு பாடிய தந்தையும்(பெரியஆழ்வார்), திருப்பாவை பாடிய மகளும்(ஆண்டாள்) பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்.

பூமாதேவி ஆண்டாளாகவும், கருடாழ்வாரின் அம்சமாக பெரியாழ்வாரும் இத்தலத்தில் அவதரித்தனர். இந்த ஊரை கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என சிறப்பித்து சொல்வர். இதனால் 108 திவ்யதேசங்களில் இல்லாத பெருமை இந்த கோவிலுக்கு உண்டு. மேலும் உலகம் எங்கும் உள்ள பெருமாள் கோவிலில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை தமிழில் பாடப்படுவது சிறப்பு பெற்றதாக கருதப்படுகிறது.

இவ்வளவு சிறப்பு மிக்க ஆண்டாள் கோவிலில் தற்போது கற்சிற்பமாக இருக்கும் ஆண்டாள் திருப்பாவை விமானத்தை தங்க விமானமாக மாற்றும் திருப்பணி பல கோடி மதிப்பில் நடந்து வருகிறது. இதற்காக 120 கிலோ தங்கம் பயன்படுத்தப்படுகிறது. இது ஆண்டாள் பாடிய திருப்பாவையின் 30 பாடல்களை குறிக்கும் வகையில் உள்ளது.

இந்த விமானம் தான் மற்ற பெருமாள் கோவில் விமானத்தை விட பெரியதாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆண்டாள் தோழியரை எழுப்பும் சிற்பங்கள், பெருமாள் அவதாரங்களை குறிக்கும் சிற்பங்கள், பெருமாள் புகழ்பாடும் சிற்பங்கள் என 300-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன.

இந்த சிற்பங்களை தங்கமயமாக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இதற்காக மெழுகுமூலம் இந்த சிலைகள் அச்சு எடுக்கப்பட்டு இதன் அளவு மாறாமல் தாமிர தகட்டில் புதிய சிற்பம் உருவாக்கப்படுகிறது. இந்த தாமிர சிற்பம் கற்சிற்பத்தில் பொருத்தப்படுகிறது. பின்பு இதில் தங்கம் ஓட்டி தங்கமயமான சிற்பமாக மாற்றப்பட்டு வருகிறது.

ஆண்டாள் கோவில் தங்க விமானம் 5 அடுக்கு உள்ளது. இதில் தற்போது 2 அடுக்குகளில் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்தால் பல சிறப்புகள் பெற்ற ஆண்டாள் கோவிலுக்கு தங்ககோவில் என்ற பெயரும் ஏற்பட்டுவிடும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment