Wednesday, February 20, 2013
விசுவரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
கோவில் வரலாறு
ராமாயண இதிகாச காலம் முடிந்து விட்டது. ராமச்சந்திரமூர்த்தியான ராமபிரான் தன் அவதார நோக்கமும், அவதாரத்தின் பயணமும் நிறைவடைந்ததை அடுத்து வைகுண்டம் செல்ல முடிவு செய்தார். அப்போது தன்னுடன் ஆஞ்சநேயரையும் அழைத்துச் செல்ல விரும்பினார் ராமர். ஆனால் அதனை ஏற்க மறுத்து விட்டார் வாயு புத்திரன்.
ராம நாமம் உச்சரிக்கப்படும் இப்பூவுலகமே எனக்கு எப்போதும் ஏற்ற இடம் என்று கூறி, புண்ணிய பூமியால் இந்த பாரத பூமியில் வாழ்ந்து கொண்டிருப்பவர் ஆஞ்சநேயர். விசுவரூப பஞ்சமுக அனுமன்....... ராமர் மேல் தான் வைத்திருக்கும் அன்பை நெஞ்சை பிளந்து காட்டி அனைவருக்கும் பறைசாற்றிய அனுமனுக்கு இப்பூவுலகில் கோவில் இல்லாத இடம் எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை.
ஏனெனில் அனுமனை வணங்கினால் அவரது அனுக்கிரகம் மட்டுமின்றி, தன் அன்பனை வேண்டியவர்களுக்கு தனது அனுக்கிரகத்தையும் சேர்த்து வழங்குவார் ராமபிரான். ஆஞ்சநேயரை அவர் புகழ் பாடி வணங்குவதை விட, ராம துதி பாடியே அனைவரும் வணங்குகிறோம். எனவே ராம, ஆஞ்சநேயர் இருவரின் அனுக்கிரகமும் பக்தர்களுக்கு கிடைத்து விடுகிறது. சென்னை அடுத்துள்ள திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது விசுவரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்.
பிரம்மாண்ட ரூபமாய் ஓங்கி உயர்ந்து நிற்கும் இந்த ஆஞ்சநேயர் 32 அடி உயரம் கொண்டவர். அவர் நிற்கும் 10 அடி உயர பீடத்தையும் சேர்த்து 42 அடி உயரத்துடன், பத்து கரங்களுடன் காட்சியளிக்கிறார் இந்த விசுவரூப பஞ்சமுக ஆஞ்சநேயர். ஒன்பது கரங்களில் பல்வேறு ஆயுதங்களை தாங் கியும், 10-வது கரத்தில் அபயஹஸ்தமாகவும் காட்சி தந்து அருள்பாலித்து வருகிறார்.
சிவ பூஜையில்
பழங்கால ஓலைச்சுவடிகளில் திருவள்ளூர் தலமானது ருத்ரவனம் என்றும், இங்கு அகத்தியர் உள்ளிட்ட பல மகரிஷிகள் தவம் செய்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அகத்தியர் ஒரு முறை இங்கு சிவ பூஜையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக சஞ்சீவிமலையை தூக்கிக் கொண்டு சென்ற ஆஞ்சநேயர், ஒரு கணம் அந்த பூஜையில் பங்கேற்றார் என்றும் அறியப்படுகிறது.
இதன் காரணமாக இந்த பகுதியில் விசுவரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோவில் கட்டப்பட்டுள்ளது. ஓங்கிஉயர்ந்த இந்த பஞ்சமுக திருமேனியனுக்கு ஆகம விதிகளின்படி நித்திய பூஜைகள் மற்றும் விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் இந்த கோவிலுக்கு அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து விசுவரூப பஞ்சமுக ஆஞ்சநேயரை தரிசனம் செய்து செல்கின்றனர்.
பஞ்சமுக சிறப்பு
பஞ்சமுக ஆஞ்சநேயரின் ஐந்து முகங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச்சிறப்பையும், சக்தியையும் கொண்டுள்ளன. கிழக்கு திசையை பார்த்தபடி இருக்கும் முகம் பாவங்களின் கறைகளை நீக்கி தூய்மையான மனத்தை அளிக்கும். தெற்கு பார்த்த முகம் நரசிம்ம சுவாமியின் முகமாகும். இது எதிரிகளின் பயத்தை போக்கி வெற்றியை கொடுக்கும். மேற்கு பார்த்த முகம் மகாவீர கருட சுவாமியின் முகமாகும்.
இது தீய சக்திகள் பில்லி, சூனியம் போன்றவற்றின் ஆதிக்கம், உடலில் உள்ள விஷத் தன்மைகளை விலகிப் போகச் செய்யும். வடக்கு பார்த்த முகம் லட்சுமி வராக மூர்த்தியின் முகமாகும். இது கிரகங்களால் ஏற்படக் கூடிய கெட்ட விளைவுகளை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்க வழி செய்யும். வானத்தை நோக்கியபடி அமைந்த முகம் ஹயக்ரீவ சுவாமியின் முகமாகும். இவர் ஞானம், வெற்றி, முக்தி, நல்ல சந்ததிகளை வழங்குவார்.
உறையூர் அருள்மிகு செல்லாண்டி அம்மன் ஆலயம்
ஆலயங்களில் இறைவியின் திருவுருவை முழுமையாக தரிசனம் செய்வதே அனைவருக்கும் பழக்கம். ஆனால் ஒரு அம்மனை மூன்று பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு ஊர்களில் ஆலயம் அமைத்து வழிபடுவதை ள்விப்பட்டிருக்கிறீர்களா?
அன்னையை மூன்று பகுதிகளாகப் பிரித்து முதல் பகுதியான தலைக்கு மதுரை சிம்மக்கல்லில் ஒரு ஆலயமும், இரண்டாவது பகுதியான உடலுக்கு கரூர் அருகே உள்ள நொய்யலில் ஒரு ஆலயமும் அமைந்துள்ளது. தலையும் உடலும் இல்லாத வெறும் கால் பாதங்கள் மட்டுமே கொண்ட அம்மனின் மூன்றாவது பகுதி உள்ள இடம்தான் திருச்சி அருகே உள்ள உறையூர் அருள்மிகு செல்லாண்டி அம்மன் ஆலயம்.
இதன் தல வரலாறு என்ன?
சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்நாட்டை ஆண்ட சேர சோழ பாண்டிய மன்னர்களிடையே ஒற்றுமையே இல்லாமல் இருந்தது. எந்த நேரமும் போர் மூளலாம் என மக்கள் பயந்து கொண்டேயிருந்தனர். அவர்கள் பயந்தபடி இந்த மன்னர்களிடையே அடிக்கடி போர் மூண்டது. பல ஆயிரமாயிரம் மக்கள் உயிரிழந்தனர்.
பல்லாயிரக் கணக்கான மக்கள் காயமடைந்தனர். இந்த வேதனைக்கு முடிவே கிடையாதா? மூன்று மன்னர்களின் மனதில் இந்த வினா மெல்ல துளிர்விட்டது. ஆனால் விடைதான் கண்டுபிடிக்க இயலவில்லை. வினாவுக்கு விடை கிடைக்கும் முன்பாக மறுபடியும் போர் மூண்டது. ஒரு வயதான மூதாட்டி போர்க்களம் வந்தாள்.
மூன்று மன்னர்களையும் தனித்தனியாக சந்தித்தாள். 'உங்களது மண் ஆசை, பொன் ஆசையால் இப்படி ஒற்றுமை இல்லாமல் இருக்கிறீர்களே! உங்களது தகாத ஆசையால் எவ்வளவு உயிர்கள் மாள்கின்றன. எவ்வளவு பேர் காயமடைகிறார்கள்? ஏன் நீங்கள் ஒற்றுமையாக இருந்து மக்களை வாழ வைக்கக் கூடாது?' என்று கேட்ட மூதாட்டி உடனே மறைந்து போனாள். மூன்று மன்னர்களும் ஒன்று கூடினர்.
தங்களிடம் வந்த அந்த மூதாட்டி யார் என விவாதித்தனர். விடை கிடைக்கவில்லை. பின்னர் ஒரு நாள் கோவை அருகே உள்ள மதுக்கரை என்ற ஊரில் அருள்பாலிக்கும் அன்னை பார்வதி தேவி மூன்று மன்னர்களுக்கும் தனித்தனியே காட்சி தந்தாள். சிறிது நேரத்தில் அன்னை பார்வதி தேவியின் உருவம் மூதாட்டியாக மாறியது.
மன்னர்களுக்கு உண்மை புரியத் தொடங்கியது. தங்களிடம் மூதாட்டியாக வந்தது அன்னை பார்வதி தேவி தான் என்ற உண்மையை உணர்ந்தனர் மன்னர்கள். அன்னை காட்சி தந்த இடத்தில் ஆலயம் அமைத்து இன்றைக்கு செல்லாண்டி அம்மன் எனப் பெயரிட்டு வணங்கி மன்னரும் மக்களும் வழிபடத் தொடங்கினர்.
பகை ஏதும் இன்றி யாவரும் ஒற்றுமையுடன் வாழ அன்னை அருள்பாலிக்க வேண்டுமென மக்கள் பிரார்த்தனை செய்ய அன்னை செல்லாண்டியம்மனும் அதை ஏற்றுக் கொண்டாள். அன்னையே சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு அவர்களுக்கு உரிய எல்லையை பிரித்து கொடுக்க உதவியதாகவும், அப்போது மூன்று மன்னர்களும் அம்பிகையிடம் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து தங்களுக்கு அருளும்படியும் வேண்டிக் கொண்டனராம்.
அதனால், அன்னை தன்னையே மூன்று பகுதிகளாக பகுத்துக் கொடுத்து மூன்று இடங்களில் அருள்பாலித்து மக்களின் நலம் காத்து வருகிறாள் என தலபுராணம் கூறுகிறது. அன்னை தனது மூன்றாவது பகுதியான கால் பகுதியாக உறையூரில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் ஆலயத்தில் மூலவராய் அருள்பாலித்து வருகிறாள்.
கருவறையில் அன்னையின் முழு உருவம் கிடையாது. இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதி மட்டுமே இருக்கிறது. மூன்று மாமன்னர்களின் வேண்டுகோள்படி அவர்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தங்கிய அன்னை செல்லாண்டியம்மன் இங்கு உறையூரில் சோழ மன்னனுக்கு பாத தரிசனம் காட்டினாராம்.
இவளிடம் உள்ள சூலம் ஒரு அசுரனை வதம் செய்தபடி காட்சி தருகிறது. அபிஷேகத்தின் போது மட்டுமே இந்த அமைப்பை காண முடியும். மற்ற நேரங்களில் இந்த உருவத்திற்கு உடல், தலை ஆகியவை இருப்பது போல் அலங்காரம் செய்து விடுகின்றனர். இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
அழகிய முகப்பை தாண்டினால் அகன்ற பிரகாரம். அடுத்து உள்ளது மகாமண்டபம். மகா மண்டபத்தின் தென்புறம் ஸ்ரீஆரியப்பூ ராஜா, காத்தவராயன் சன்னதிகளும், வடபுறம் கருப்பண்ணசாமி, மதுரை வீரன் சன்னதிகளும் உள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலில் இடதுபுறம் விநாயரும், வலது புறம் முருகன், வள்ளி, தெய்வானை திருமேனிகளும் அருள்பாலிக்கின்றன.
முகப்பில் கம்பீரமான இரு துவார பாலகிகளின் சுதை வடிவத் திருமேனிகளை அடுத்து அர்த்த மண்டபமும் தொடர்ந்து கருவறையும் உள்ளன. கருவறையில் அன்னையின் அலங்கரிக்கப்பட்ட திருமேனியை நாம் கண் குளிர தரிசிக்கலாம். அன்னையின் அலங்கார திருமேனிக்கு பின்புறம் அன்னையின் முழு உருவச் சிலை ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இது பிற்காலத்தில் வடிவமைக்கப்பட்டது. பிரகாரத்தின் தென் கிழக்கு மூலையில் பல நூற்றாண்டுகளைக் கடந்த அரச மரமும் வேம்பும் இணைந்த தல விருட்சங்கள் உள்ளன. விருட்சத்தின் அடியில் வலம்புரி விநாயகர், நாகர் திருமேனிகள் உள்ளன. பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் சாம்பச மூர்த்தி சிலை உள்ளது.
சித்திரை மாதம் அன்னைக்கு 8 நாட்கள் 'காளி ஓட்டத் திருவிழா' என்ற திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இங்கு அம்மனுக்கு உற்சவ விக்ரகம் இல்லை. அதனால், பனை ஓலையினால் செய்யப்பட்ட அன்னையின் உருவத்தை கோவிலுக்கு சற்றே தொலைவில் உள்ள ஒரு திடலுக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு அன்னைக்கு 5 நாட்கள் சிறப்பான பூஜைகள் நடை பெறுகின்றன.
ஆறாம் நாள் அன்னையை மீண்டும் கோவிலுக்கு கொண்டு வருகின்றனர். ஆரம்ப காலத்தில் அன்னையை கோவிலிருந்து திடலுக்கு தூக்கிக் கொண்டு ஓடும் வழக்கம் இருந்ததாம். அதனால் தான் இவ்விழா 'காளிஓட்டத் திருவிழா' என அழைக்கப்பட்டது. இப்போது அந்தப் பழக்கம் நடை முறையில் இல்லை.
ஒவ்வொரு மாத பவுர்ணமி அன்றும் அன்னைக்கு நவதானிய அபிஷேகமும், அன்னாபிஷேகமும் நடைபெறும். பின்னர் இவைகளை ஆற்றில் கொண்டு போய் மீன்களுக்கு உணவாக விடுகின்றனர். இந்த அன்னாபிஷேகத்தில் உபயோகப்படுத்தும் அன்னத்தின் ஒரு பகுதியை உருண்டையாக்குகின்றனர்.
குழந்தை வேண்டி வேண்டும் பெண்களுக்கும், திருமணம் நடைபெற வேண்டி வேண்டும் பெண்களுக்கும் இந்த அன்ன உருண்டையை பிரசாதமாகத் தர அவர்கள் வேண்டுதல் நிறைவேறுவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள். மாத பவுர்ணமிகள், அனைத்து வெள்ளிக் கிழமைகள், மாத அமாவாசைகள், நவராத்திரி, பொங்கல் ஆகிய நாட்களில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன்.
ஆடிப்பூசத்தில் அன்னைக்கு ஆயிரக்கணக்கான வளையல்களைக் கொண்டு வளையல் அலங்காரமும், ஆனி மாத கடைசி வெள்ளியன்று அன்னைக்கு காய்கறி அலங்காரமும் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.
இந்த ஆலயம் காலை 6 முதல் 11.30 மணி வரையிலும் மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இரவு நேரங்களில் கோவில் அருகே அன்னை நடமாடுவதாகவும், அவள் நடந்து வரும் கொலுசின் ஓசை கோவிலின் உள்ளேயும் வெளியேயும் நிறைய முறை கேட்பதாக சுற்றிலும் குடியிருக்கும் மக்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர். மூவேந்தர்களுக்காக தன்னையே மூன்று பாகங்களாக பிரித்துக் கொண்டு மூன்று நாடுகளில் தங்கி அருள்புரிபவள் இந்த செல்லாண்டி அம்மன்.
எனவே, இந்த அன்னை தன்னை நாடி வரும் பக்தர்களுக்காக, அவர்கள் மனம் வருந்தாமல் அவர்கள் நினைத்ததை நிறைவேற்றி தருவதில் வல்லவள் என்று பக்தர்கள் நம்புவது நிஜமே!
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள உறையூரில் உள்ளது இந்த அன்னை செல்லாண்டி அம்மன் ஆலயம்.
Thursday, February 14, 2013
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில்
மூலவர் - சனீஸ்வரன்
தல விருட்சம் - விடத்தை
தல புஷ்பம் - கருங்குவளை
தல இலை - வன்னி இலை
வாகனம் - காகம்
தானியம் - எள்
பழமை - 1000 வருடங்களுக்கு முன்பு
புராணப் பெயர் - செண்பகநல்லூர்
ஊர் - குச்சனூர்
மாவட்டம் - தேனி
கோயில்கள் அனைத்திலும் சனிபகவான் நவக்கிரகமாக வீற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் திருநள்ளாறுக்கு அடுத்து சுயம்புவாக வீற்றிருப்பது தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வரன் கோயிலில் தான். அரூபி வடிவ இலிங்கம் பூமியிலிருந்து வளர்ந்து கொண்டே வருகிறது.
இதை கட்டுப்படுத்த மஞ்சன காப்பு பூசப்பட்ட நிலையிலேயே சுயம்பு உள்ளது. சனிபகவானுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடித்து நீங்கினதாக வரலாறு பெற்ற தலம். சனிபகவான் சுயம்புவாய் எழுந்தருளியுள்ள ஒரே தலம். சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுதல் மிகவும் சிறப்பு. தினகரன் என்ற மன்னன் குழந்தை வரம் வேண்டி இறைவனிடம் வேண்டினான்.
அப்போது அசரீரி ஒன்று உன் வீட்டுக்கு ஒரு பிராமணச் சிறுவன் வருவான். அவன் வந்த பிறகு உனக்கு குழந்தை பிறக்கும் என்றது. அதுபடியே வந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயரிட்டு வளர்த்தான். அரசிக்கும் குழந்தை பிறந்து சதாகன் என்ற பெயருடன் வளர்ந்தான். புத்திசாலியான வளர்ப்பு மகன் சந்திரவதனனுக்கே முடி சூட்டப்பட்டது.
இந்நிலையில் மன்னன் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது. இதனால் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்கு சென்று இரும்பால் சனியின் உருவத்தை படைத்து வழிபட்டான். "வளர்ப்பு மகனான எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்கு துன்பம் தராதே அத்துன்பத்தை எனக்கு கொடு'' என்று வேண்டினான்.
சனீஸ்வர பவகவான் அவனது நியாயத்தை உணர்ந்து ஏழரை நாழிகை மட்டும் அவனை பிடித்துக்கொள்வதாகக் கூறி பல கஷ்டங்களைக் கொடுத்தார். பின்பு அவன் முன் தோன்றி உன்னைப்போன்ற நியாயஸ்தர்களைப் பிடிக்க மாட்டேன் என்றும் இப்போது உன்னை பிடித்தற்கு காரணம் உன் முன் ஜென்ம வினை என்று கூறி மறைந்தார்.
பிறகு சந்திரவதனன் இவ்வூரில் குச்சுப்புல்லால் கூறை வேய்ந்து கோயில் எழுப்பினான் என வரலாறு கூறகிறது. இதுவே குச்சனூர் என பெயர் வழங்க காரணமாயிற்று. சனி தோசம் உள்ளவர்கள் இங்கு மனமுருக வேண்டிக்கொண்டால் அவர்களுக்கு சோதனைகள் விலகி சுபிட்சம் கிடைக்கிறது.
மேலும் புதிய தொழில் தொடங்க, வியாபார விருத்தி மற்றும் குடும்ப நலம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர். பகவானுக்கு எள் விளக்கு போடுதல், காக்கைக்கு அன்னமிடல் ஆகியவற்றை செய்யலாம். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
திருவிழா: 5 வார ஆடிப் பெருந்திருவிழா, இரண்டரை வருடத்திற்கொரு முறை சனிப்பெயர்ச்சித் திருவிழா.
Sunday, February 10, 2013
தஞ்சைபுரீஸ்வரர் கோவில்
கோவில் வரலாறு
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கட்டுவதற்கு முன்பாக அந்த இடத்தின் பின்புறம் தஞ்சைபுரீஸ்வரர் கோவில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு சமயம் இலங்காபுரியை ஆட்சி செய்து வந்த ராவணன், தான் பெற்ற தவ வலிமையால், குபேரனுடைய செல்வங்கள் அனைத்தையும் கவர்ந்து சென்றான்.
இதனால் செல்வங்களை இழந்த குபேரன் அனாதைபோல் ஆனார். இழந்த செல்வங்களை திரும்பப்பெறும் வகையில் பூலோகத்தில் உள்ள ஒவ்வொரு சிவாலயங்களாகச் சென்று ஈசனை தரிசனம் செய்து வந்தார். அவ்வாறு தஞ்சையில் உள்ள சிவபெருமானை வழிபட்டு அங்கேயே தஞ்சம் புகுந்தான்.
இதன் காரணமாக அந்த ஈசன் தஞ்சபுரீஸ்வரர் என்றும் தஞ்சம் அடைந்தவர்களைக் காப்பாற்றும் வல்லமை படைத்த ஈசனே தஞ்சபுரீஸ்வரராக அருள்தருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் குபேரன், ஈசனை தஞ்சம் அடைந்ததால் அந்த ஊர், தஞ்சஊர் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் தஞ்சாவூர் என்று மருவிவிட்டதாக தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
குபேரன் இந்த தல ஈசனை வழிபட்டதன் காரணமாக குபேரபுரீஸ்வரர் என்றும் இறைவன் அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்திற்கு குபேரன் வந்து தங்கியதைக் குறிக்கும் வகையில் சுவாமி சன்னிதிக்கு முன்புறம் வலது தூணில் குபேரன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
Wednesday, February 6, 2013
Monday, February 4, 2013
ஸ்ரீகல்யாணி மாரியம்மன் கோவில்
கோவில் தோன்றிய வரலாறு
சின்னகுமார்பட்டி கிராமம் (வெங்காடம்பட்டி கிராமம், ஆலங்குளம் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம்) திருநெல்வேலி- தென்காசி மெயின் ரோட்டில் மகிழ்வண்ணநாதபுரம் ஊரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது. மேற்படி கோவிலில் கொடை விழா நிகழ்ச்சிகள் சுமார் 36 வருடகாலமாக நடந்து வருகிறது.
முதலில் கோவில் கட்டியுள்ள இடத்தில் இருக்கும் வேப்பமரத்தின் அடியில் ஒரு சிறிய மேடையில் மண் விளக்கு வைத்து வருடம் ஒரு முறை தை மாதம் கடைசி செவ்வாயன்று கொண்டாடப்பட்டு வந்துள்ளது.
இந்த வேப்பமரம் இருந்த இடத்தில் ஒரு அம்மன் கோயில் கட்டவேண்டும் என ஊரில் பலர் அருள் வந்து சொன்ன போதும் அந்த இடத்தின் அப்போதைய உரிமையாளர் திரு.சுந்தரலிங்கநாடார் எல்லோரிடமும் சொல்லும் அந்த தெய்வம் என் வீட்டில் யாருக்காவது வந்து சொல்லட்டும், பிறகு பார்க்கலாம் எனக் கூறி தப்பி வந்துள்ளார்.
அவர் காலத்திற்கு பின் அவருடைய ஒரே மகன் லேட் திரு. நடராஜன் அவர்களின் மூத்த மகன் திரு.தயாளசுந்தர் அவர்களின் மனைவி டாக்டர் பவானி அவர்கள் திருமணமாகி 2 மாதங்களில் அந்த கிராமத்திற்கே சென்றிருந்த போதில் அவர் கனவில் அம்மன் தோன்றி ஒரு மாதமாக காய்ச்சலால் அவதிப்படும் உன் கணவர் குணமாக வேண்டுமானால் என் சந்நதியில் வந்து வழிபட வேண்டும் என ஒரு தாய்வடிவில் வந்து கூறியுள்ளது.
அந்த இடம் எங்கு உள்ளது என்று தெரியாத நிலையில் டாக்டரின் தாயார் அதிகாலை திடீரென்று வீட்டிற்கு வந்து அன்று தான் அந்த கிராமத்திற்கு அழைத்துசென்றார். திருமதி. பவானி அவர்களின் கனவில் வந்த அதே மேடையையும் மண்விளக்கையும் பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்தார்.
எனவே கனவில் சொன்னபடி அந்த கோவில் அதே இடத்தில் கட்டி திரு.நடராஜன் அவர்களால் உள்ளுர் உறவினர்கள், நண்பர்கள், பக்தகோடிகள் மூலம் நன்கொடை பெறப்பட்டு 1985ம் ஆண்டு அன்று கோவில் கட்டப்பட்டது.
அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொடைவிழா, வருஷாபிசேக விழா, தினசரி பூஜைகள் (காலை 5-8 மணி மாலை 5-8 மணி) பௌர்ணமி விளக்கு பூஜை, கடைசி வெள்ளி பூஜைகளும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதே ஊரில் பல ஆண்டுகளாக முறைப்படி ஸ்ரீகல்யாணி மாரியம்மாளுக்கு பணிவிடை மற்றும் சிறப்பாக பூஜை முதலியன செய்து வரும் திரு.பாலமுருகன், போலீஸ்காராக பணிகிடைத்து ஒரு நாள் பைக்கில் சென்று கொண்டிருந்த போது ஒரு லாரி மோதி லாரியின் அடியில் அகப்பட்டும், “அம்மா என்னைக் காப்பாற்று “ என்ற அழைப்பிற்கு ஓடிவந்தது போல் ஒரு காயமும் இல்லாமல் காப்பாற்றினாள் என்றால் அது மிகையாகாது.
இதே ஊரில் உள்ள திரு.சின்னமணி நாடார் ஒவ்வொரு கொடைவிழாவின் போதும் அக்னிசட்டி தன்தலையில் ஏற்றி ஊர் முழுவதும் ஆடி வருவார் அருள் வாக்கும் கூறும் இவரின் மகன் திரு.நடராஜன் கேரளாவில் இரும்பு வியாபாரம் செய்ய சென்றபோது காலை விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
(அதே நாளில் திருமதி.பவானி யாரோ தலையில் இரண்டு புறமும் மாறி மாறி அடிப்பது போன்றும் , கல்யாணி மாரியம்மாள் வந்து தடுத்து பவானி அவர்கள் தலையில் 3 எலுமிச்சம் பழங்களைப் பிழிந்து உன்னை காப்பாற்றி விட்டேன் என்று கூறி சென்றது).
அது மாதிரியே நடராஜனின் தலையிலும் விரோதிகள் தலையின் இருபுறமும் தாக்கியுள்ளனர். சுய நினைவு இழந்த நடராஜன் திடீரென்று சுயநினைவு திரும்ப ஊருக்கு திரும்பி அன்று இரவு நடந்த கோவில் கொடைவிழாவில் பங்கேற்று அக்னிசட்டி எடுத்தது மிகவும் உணர்ச்சி பொங்கிய அதிசயமாகும். இன்று எந்த குறைபாடும் இல்லாமல் சுய நலத்துடன் உயிர்பெற்றார்.
இதைப்போலவே பல பக்தகோடிகள் திருமணமாகவோ, குழந்தை பாக்கியம் பெறவோ, வீட்டுப் பிரச்சனைகளுக்காகவோ, வியாபார அபிவிருத்திக்காகவோ, வேலை கிடைக்கவோ அம்பாளிடம் பிரார்த்தனையும் எளிய நேர்த்திகடன் செய்தால் அம்பாள் அடுத்த கனமே நிறைவேற்றி வைப்பாள் என்றால் மிகையாகாது. எனவே அனைவரும் கல்யாணி மாரியம்மாள் அருள் பெற வேண்டுகிறோம்.
இந்த வருட திருவிழா நிகழ்ச்சிகள் (2013)
* திங்கட் கிழமை (4-2-13) அன்று மாலை 6 மணிக்கு விளக்கு பூஜையும், அன்று இரவு 7 மணிக்கு அன்னதானமும் நடைபெறும்
* செவ்வாய் கிழமை (5-2-13) நண்பகல் 12 மணியளவில் கேரளா செண்டா மேளம் முழங்க குற்றாலம் புனித நீர் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெறும்.
* செவ்வாய் இரவு 7 மணிக்கு அன்னதானம் நடைபெறும்.
* நள்ளிரவு 12 மணிக்கு கல்யாணி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜையும், கண்கவர் வாணவேடிக்கையும் நடைபெறும்.
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில்
கோவில் வரலாறு
புதுக்கோட்டை திருச்சி சாலையில் புதுக்கோட்டையில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது நார்த்தாமலைக் கோவில் முகப்பு. இங்கிருந்து 2 கிலோ மீட்டர் உள்ளே சென்றால் நார்த்தாமலையை அடையலாம். முத்துமாரியம்மன் கோவில் கொண்டிருக்கும் இந்த நார்த்தாமலை, மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் இடமாகவும் திகழ்கிறது.
இயற்கை எழில் சூழ்ந்த இந்த பகுதியில் மேலமலை, கோட்டை மலை, கடம்பர் மலை, உவச்சமலை, ஆளுருட்டி மலை, மணமலை, பொம்மாடிமலை, பொன்மலை, செட்டிமலை, பின்னமலை ஆகிய சிறுமலைகள் காணப்படுகின்றன. ராமா நார்த்தாமலை யண காலத்தில் சஞ்சீவி மலையை அனுமன் தூக்கிச் சென்றபோது விழுந்த மலை துண்டுகள் தான் இங்கு குன்றுகளாக உள்ளன என்று கூறப்படுகிறது.
இந்த மலை குன்றுகளில் அரியவகை மூலிகைகள் காணப்படுகின்றன. மேலும் நார்த்தாமலை யில் தளவர் சுனை, ததும்பு சுனை, ஏழு சுனை, இரட்டை சுனை, மேலச்சுனை, அருகன் சுனை, புலி குடிக்கும் சுனை, நவச்சுனை, மஞ்சள் சுனை உள்பட பல்வேறு சுனைகள் காணப்படுகின்றன.
கி.பி. 910 ஆகிய நூற்றாண்டுகளில் வணிகர்கள் பலர் ஒரு குழுவாக இருந்து கோவில்கள், குளங்கள் மற்றும் ஊர் நிர்வாகம் ஆகியவற்றை கவனித்து வந்துள்ளனர். இந்த குழுவிற்கு நகரம் என்று பெயர். எனவே இந்த ஊர் நகரத்தார் மலை என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி நார்த்தாமலை என்று அழைக்கப்படுகிறது.
நிலத்தில் கிடைத்த அம்மன்
நார்த்தாமலை ஊரின் வடக்கில் 6 கிலோமீட்டர் தொலைவில் கோவிலூரி என்ற இடத்தில் முருகன் கோவில் ஒன்று இருந்தது. நார்த்தாமலையில் வசித்து வந்த சிவாச்சாரியார் ஒருவர் நாள் தோறும் பூஜை செய்து வந்தார். அப்போது அவரது பூஜைக்கு இடையூறு ஏற்பட்டதால், அவர் முருகன் கோவிலில் இருந்து சக்கரத்தை (தெய்வீக சிறப்பு வாய்ந்த எந்திரம்) கொண்டு வந்து வைத்து வழிபாடு செய்தார்.
இந்த நிலையில் நார்த்தாமலை அருகே உள்ள கீழக்குறிச்சி என்ற ஊரில் விவசாயி ஒருவர் நிலத்தை உழுது கொண்டிருந்த போது அம்மன் சிலை கிடைத்தது. அந்த விவசாயியின் கனவில் தோன்றிய அம்மன் நார்த்தாமலையில் தன்னை சேர்த்துவிடும்படி கூறியதை தொடர்ந்து விவசாயியும் அப்படியே செய்தார். நார்த்தா மலையில் இருந்த சிவாச்சாரியார் கனவிலும் தோன்றிய அம்மன் தன்னை அங்கே பிரதிஷ்டை செய்து வழிபடும்படி கூறினார்.
கோலில் அமைப்பு
இதையடுத்து முத்துமாரியம்மன் என்று பெயரிட்டு, ஒரு கீற்று கொட்டகையில் அம்மனை எழுந்தருளச் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் முருகன் எந்திரத்தையும், அம்மன் பீடத்தில் வைத்து வழிபாடு செய்து வந்தார். இதன் காரணமாக அம்மனுக்கு முருக வழிபாட்டு முறைகள் இணைந்து நடைபெற்று வருவதை இன்றும் காணலாம்.
காவடி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற வழிபாடுகள் இந்த அம்மனுக்கு உண்டு. முத்துமாரியம்மன் கோவில் கிழக்கு நோக்கி கோவில் அமைப்பு அமைந்துள்ளது. இரண்டு சுற்றுகளை கொண்ட கோவிலில் கோபுரத்திற்குள் நுழைந்ததும் முதல் சுற்று தொடங்குகிறது. இதில் புதியதாக அமைக்கப்பட்டமண்டபம் காணப்படுகிறது.
இரண்டாவது சுற்றுப்பகுதியில் நுழைவு வாசல் வழியாக செல்வோர் முதலில் காண்பது கொடி மரம். இதனை அடுத்து பலிபீடம் காணப்படுகிறது. கொடி மரம் அருகே உள்ள மணி மண்டபத்தின் விதானத்தில் சரவணபவ என்ற எழுத்தும், முருகவழிபாட்டை குறிக்கும் சக்கரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
மணி மண்டபத்தின் இடதுபுறத்தில் விநாயகர், கருவறை மகாமண்டப நுழைவு வாசலில் மேற்புறம் கஜலட்சுமி, இருபுறமும் துவாரபாலகியரின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் இடது காலை மடக்கி வலது காலை தொங் கவிட்டு அமர்ந்த கோலத்தில் அம்மன் காட்சி தருகிறார். அக்னி மகுடம் தரித்து, மேல் இருகரங்களில் உடுக்கை, வஜ்ராயுதம் தாங்கியும், வலது கீழ் கரத்தில் சிறு கத்தி, இடது கரத்தில் கபாலம் தாங்கியும் அருள் பாலிக்கிறார். வலது காதில் பத்ர குண்டலமும், இடது காதில் மகர குண்டலமும் அணிந்திருப்பது சிறப்பு.
மலையம்மாள்
ஒரு முறை திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் ஜமீன் குடும்பத்தார் புனித பயணம் புறப்பட்டனர். அப்போது அனைவரும் இந்த தலத்திற்கு வந்தனர். வந்த இடத்தில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த மலையம்மாள் என்ற சிறுமிக்கு அம்மை நோய் தாக்கியது. இதையடுத்து சிறுமியை கோவிலில் பாதுகாப்பாக விட்டு விட்டு, அனைவரும் புனித பயணம் புறப்பட்டு சென்று விட்டனர்.
புனித பயணம் முடிந்து திரும்பும் வேளையில் மீண்டும் அவர்கள் இந்த கோவிலுக்கு வந்தபோது அம்மை நோய் தீர்ந்த சிறுமியின் முகம் ஒளி பெற்றிருப்பதைக் கண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் மலையம்மாளை அனைவரும் தங்களுடன் அழைத்துச் செல்ல கூப்பிட்டபோது, முத்து மாரியம்மன் தான் இனி எனது பெற்றோர். நான் இங்கிருந்து எங்கும் வரமாட்டேன் என்று கூறிவிட்டாள்.
பின்னர் கோவிலின் அருகிலேயே ஒரு குடில் அமைத்து தங்கினார். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விபூதி கொடுத்து தீராத நோய்களை தீர்த்து வைத்தார். இதன் மூலமாக கிடைத்த காணிக்கைகளை கொண்டு பல திருப்பணிகளை செய்தார். கோபுரத்திற்கு முன் உள்ள 16 கால் மண்டபமும், கோவில் திருத்தேரும் மலையம்மாள் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
16 கால் மண்டப தூணில் வணங்கிய கோலத்தில் மலையம்மாள் சிற்பம் காணப்படுகிறது. சுயநலம் கருதாது தன்னையே அம்மனின் தொண்டுக்கு அர்ப்பணித்துக் கொண்ட மலையம்மாளின் சமாதி கோவிலுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், இங்கு சென்று வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மத நல்லிணக்கம்
மேல மலையின் முக்கியமான நினைவுச்சின்னமாக விஜயாலயா சோழீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சோழர்கால கட்டிட அமைப்பை கொண்டது. கோவில் கருவறை மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது. அதனை சுற்றி துர்க்கை, சப்தமத்ரிகாஸ், கார்த்திகேயா, கணேசா, சண்டேசா, சந்திரா, ஜேஸ்டா ஆகிய ஏழு தலங்கள் உள்ளன. வட்ட வடிவிலான கர்ப்ப கிரகமும், சதுர வடிவில் அர்த்தமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன.
நார்த்தாமலையில் வசித்தவர் மஸ்தான். சித்த வைத்தியரான இவர், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவம் செய்து வந்தார். இவர் தன் உயிர் பிரியும் நேரத்தையும், இறந்தபின் அடக்கம் செய்யும் நேரத்தையும் குறித்து வைத்திருந்தார். அதன்படியே அனைத்தும் நடைபெற்றது. அவரது தர்காவில் பல தரப்பு மக்களும் வழிபாடு செய்து வருகின்றனர். இங்கு சந்தன கூடு விழா, நார்த்தாமலை தேர்திருவிழாவின் போது நடைபெறும். இது மத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
பூச்சொரிதல்
முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். புதுக்கோட்டை நகரில் இருந்தும், நார்த்தாமலையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் பல வகையான மலர்களை (தென்னம்பாலை உள்பட), மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகான ஊர்திகள் மூலமும், தட்டுகள், கூடைகளில் வைத்தும் பக்தர்கள் கோவிலுக்கு கொண்டு வருவார்கள்.
அவ்வாறு கொண்டுவரப்படும் நறுமண மலர்கள் அம்மன் சன்னிதிக்கு முன்பு உள்ள பெரிய மர தடுப்பில் கொட்டி வைக்கப்படும். பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்து அம்மனின் முகம் மட்டும் தெரியும்படியும் மற்ற அங்கங்கள் யாவும் மலர்களால் மூடப்பட்டும் இருக்கும். இக்காட்சி மெய்சிலிர்க்க வைக்கும் அற்புத காட்சியாக இருக்கும். மறுநாள் காலையில் இந்த மலர்கள் பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக வழங்கப்படும்.
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்
கோவில் வரலாறு
நம் தமிழ் நாட்டில் அம்மன் ஆலயங்கள் ஏராளம். இந்த அம்மன்கள் யாவரும் உமையவளின் மறு உருவே என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட ஒரு அம்மனின் ஆலயம் கோடாலி கருப்பூர் என்ற கிராமத்தில் உள்ளது. கும்பகோணம் அணைக்கரை நெடுஞ்சாலையில் அணைக்கரையிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது கோடாலி கருப்பூர் என்ற இந்த தலம்.
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் என்ற இந்த ஆலயம் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே நுழைந்தவுடன் பெரிய குதிரை சிலை ஒன்று நம் கண்களைக் கவரும். நுழைவு வாயிலின் வலதுபுறம் ஆலயத்தின் தலவிருட்சமான அரசும், வேம்பும் செழித்து ஓங்கி வளர்ந்துள்ளன. தலவிருட்ச மேடையில் நாகர், விநாயகர், பாவாடைராயன் திருமேனிகள் உள்ளன.
அடுத்துள்ள மகாமண்டபத்தின் வலதுபுறம் காட்டேரி அம்மன், சங்கிலி கருப்பன் சன்னதிகளும் இடதுபுறம் பாவாடைராயன் வீரன், மயானபுத்ரன் சன்னதிகளும் உள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலில் இரு துவாரபாலகிகளின் சுதை வடிவ சிலைகள் உள்ளன.
தவிர அர்த்த மண்டபத்தின் உள்ளே வலதுபுறம் பாலமுருகன், வீரபத்பரன் திருமேனிகளும் இடதுபுறம் பிள்ளையார் திருமேனிகளும் உள்ளன. உள்ளே அன்னை அங்காள பரமேஸ்வரி அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் புன்னகை தவழ அருள் பாலிக்கிறாள். அன்னையின் மேல் வலது கரத்தில் உடுக்கையும், மேல் இடது கரத்தில் சூலமும், கீழ் வலது கரத்தில் கத்தியும், கீழ் இடது கரத்தில் கபாலமும் கொண்டு இடையே சூலாயுதத்துடன் அன்னை காட்சி தருகிறாள்.
தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடக்கிறது. சித்ரா பவுர்ணமி அன்று இந்த ஆலயம் விழாக் கோலம் பூண்டிருக்கும். சுற்று வட்டார மக்கள் சுமார் 1000 பேர் பால் குடம் சுமந்து ஆலயம் வர, அன்னைக்கு அன்று குளிரக்குளிர பாலபிஷேகம் நடைபெறும் காட்சியைக் காண கண் கோடி வேண்டும். ஆடி மாதம் மற்றும் தை மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை இங்கு திருவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடை பெறுகிறது.
ஆடி மாதம் உத்திராட நட்சத்திரத்தன்று அன்னை வீதி உலா வருவதுண்டு. அன்னையின் பிரகாரத்தின் கீழ் திசையில் துர்க்கையம்மனும், தென் திசையில் ருத்ர மகேஸ்வரியும், மேல் திசையில் வைஷ்ணவியும் அருள்பாலிக்கின்றனர். இந்த மூன்று தேவிகளின் திருமேனிகள் காண்பவரை சிலிர்க்க வைப்பது நிஜம். அத்தனை அழகுடன் விளங்குகிறது இத் திருமேனிகள்.
ஆலயத்தின் மேல் திசையில் அழகான அன்னதான மண்டபம் உள்ளது. காது குத்தல் போன்ற விழாக்களை மக்கள் வேண்டிக்கொண்டு இங்கு வந்து நிறைவேற்றுகின்றனர். குழந்தை பேறு வேண்டியும், பிணி நீங்கி சுகம் பெறவும், திருமணத் தடை நீங்கவும் அன்னையிடம் வந்து வேண்டிக்கொண்டு பக்தர்கள் பலன் பெறுகின்றனர். தவிர அயல் நாடு செல்ல விரும்புவோர் அன்னையிடம் வந்து முறையிட்டால் அவர்கள் வேண்டுதல் விரைந்து பலிப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
கோட்டை பைரவர் கோவில்
புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் என்னும் தலத்தில் ஸ்ரீ கோட்டை பைரவர், கால பைரவ அம்சமாக இருந்து அருள்பாலித்து வருகிறார். சிவபெருமான் அவதாரம் கொண்டதாக ஆகமங்கள் இயம்புகின்ற இக்கோட்டை பைரவரிடம் வேண்டுதல் செய்வோருக்கு கைமேல் பலன் கிடைக்கும் என்பது இங்கு வந்து நினைத்ததை நிறைவேற்றிக்கொண்டவர்கள் கூறும் தகவல்.
கோட்டை பைரவர் ராமநாதபுரம் சீமையை ஆண்ட கிழவன் சேதுபதி என்பவரால் திருமெய்யம் கோட்டையானது கட்டப்பட்டது. அப்போது கோட்டையின் தென்புற பிரதான வாசலில் சக்தி விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் சன்னிதிகள் அமைக்கப்பட்டன.
அந்தக் கோட்டையின் வடபுறத்தில் கோட்டை பைரவர் கோவில் அமைக்கப்பட்டு எழிலுற காட்சியளிக்கிறது. மறவன் கோட்டை எனப்படும் கோட்டையும், கோட்டையின் உள்ளேயும், வெளியேயும் வாழும் சகல ஜீவராசிகள் அனைவரும் நற்பேறு அடையும் விதமாக கோட்டை பைரவர் அருள்பாலித்து வருகிறார். தமிழகத்திலேயே வடக்கு பார்த்தபடி தனிக்கோவில் கொண்டு, பக்தர்களுக்கு அருள்புரிந்து வரும் பைரவர் இவர் ஒருவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சனி தோஷங்கள் தீர இந்த கோவிலின் முன்பாகச் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பு தரும் கண்கண்ட தெய்வமாக கோட்டை பைரவர் விளங்குகிறார். சகலதோஷ பரிகார தலமாகவும் இந்த கோவில் விளங்குகிறது. அஷ்டமச் சனி, ஏழரைச் சனி உள்ளிட்ட அனைத்து விதமான சனி சம்பந்தப்பட்ட தோஷங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பைரவருக்கு அபிஷேகம், வடை மாலை, சந்தனகாப்பு செய்து நெய்தீபம், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் சனி தோஷங்கள் விலகும்.
பிதுர் தோஷங்களுக்கு பைரவருக்கு புனுகு சாற்றி எலுமிச்சை பழ மாலை அணிவித்து எள் சாத அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் பிதுர் தோஷம் நீங்கும். செவ்வாய்க்கிழமைகளில் பைரவருக்கு, செவ்வரளி மாலை அணிவித்து மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடலாம். புதன் கிழமைகளில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து புனுகு பூசி நெய் தீபம் ஏற்றி வந்தால் கல்வியில் மேன்மை பெறுவதற்கான வாய்ப்பு அதிகம்.
குழந்தைப் பேறு திருமெய்யம் கோட்டை பைரவருக்கு சந்தனாதி தைலம் சாற்றி அபிஷேகம் செய்து சந்தனக்காப்பு, வடைமாலை சாற்றி வழிபட்டால் வியாபாரம், தொழில் போன்றவற்றில் அபிவிருத்தி ஏற்படும். மேலும் இந்த பைரவருக்கு கோடி அர்ச்சனையோ, லட்சார்ச்சனையோ செய்து வழிபட்டால் குழந்தை பேறு உண்டாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
செவ்வாய்க்கிழமை களில் ராகு காலத்தில் செவ்வரளி மாலை, நெய்தீபம் ஏற்றி தொடர்ந்து ஏழு வாரங்கள் வழிபட்டு வந்தால் சகோதர ஒற்றுமை மேலோங்கும். எல்லா பரிகாரங்களுக்கும் நெய் தீபமும், மிளகு தீபமும் பொதுவானது. தேய்பிறை அஷ்டமி அன்று கோட்டை பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
இந்த நாளில் வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு நன்மைகள் நாடி வந்து சேரும். கார்த்திகை மாதம் நடைபெறும் பைரவாஷ்டமி விழா சிறப்பு வாய்ந்தது. மத்திய தொல்லியல் ஆய்வுத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த கோவில் புதுக்கோட்டை திருக்கோவில்கள் நிர்வாக அதிகாரி மற்றும் உதவி ஆணையரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
கோவிலின் அமைவிடம் திருச்சி-ராமேசுவரம் மெயின் ரோட்டிலும், தஞ்சாவூர்-மதுரை மெயின் ரோட்டிலும் உள்ள திருமயத்தில் புதுக்கோட்டையில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. கோவில் அமைந்து உள்ள இந்த மெயின் ரோடு வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த கோவிலின் அருகில் நின்று பைரவரின் அருள் பெற்ற பின்னரே தொடர்ந்து செல்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த கோவிலின் அருகில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை கண்கூடாக காணலாம்.
Subscribe to:
Posts (Atom)